சும்மாவே ஆடுபவர் அந்த கிராம முன்சீப் ! காலில் வெந்நீரும் கொட்டினால் எப்படி ஆடுவார் ? அப்படித்தான் அன்று நடந்தது !
அந்த ஊரில் சிறு மில்லும், பெரும் நிலபுலன்களும் உள்ள பண்ணையார் அவர் ! மில்லை இவர் பையன்கள் பார்த்து கொள்கிறார்கள் ! இவர் தோட்டம் துரவுகளை பார்த்து கொள்கிறார் !கொடுக்கல் வாங்கலும் உண்டு !வழக்கம் போல தோட்டத்தை மேற்பார்த்து கொண்டிருந்தார் !சுமார் நூறு ஆணும் பெண்ணும் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் ! அந்த நேரம் பார்க்க முன்சீப் தலையாரிகளுடன் வசூலுக்கு வந்தார் ! பண்ணையாருக்கு சனி உச்சத்தில் இருந்த நேரம் போலும் !
தலையாரிகளில் ஒருவர் போய் பண்ணையாரிடம் ஐயா !கிராம முன்சீப் வந்திருக்காக என்றார் ! அவர் ஒரு புழுவை பார்ப்பது போல பார்த்து விட்டு பேசாமல் இருந்து விட்டார் !
முன்சீப்போ மரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டார் ! தன்னை பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்காததோடு , தன்னை உக்காரவும் சொல்ல வில்லை ! அவருக்கு ரத்த கொதிப்பு டாப்புல ஏற ஆரம்பிச்சது ! ஏற்கனவே கண்ணு இரண்டும் சிவப்பா இருக்கும் ! இப்போது ரொம்ப சிவப்பாயிட்டது !
கோபமா தலையாரியை பார்த்தார் ! தலையாரி திரும்பவும் பண்ணையாரிடம் போய் ஐயா ! கிராம முன்சீப் வந்திக்காக ! என்றார் ! அப்பவும் கல்லு மாறி
இருந்தார் ! எந்த அசைவும் அவரிடம் இல்லை !
தலையாரி தானே வந்து சொல்லுகிறான் ! முன்சீப் வந்து தனக்கு வணக்கம் போடவில்லையே என்று பண்ணையார் எண்ணியிருக்கிறார்! பண்ணையார் தனக்கு வணக்கம் போடலையே என்று முன்சீப் எண்ணி இருக்கிறார் !
இருவுக்குள்ளும் டக்கப் வார் நடந்து கொண்டிருந்தது !
மூணாவது தடவையும் தலையாரி போய் சொன்ன போதும் பருவ நிலை மாற வில்லை !புயல் அங்கேயே மையம் கொண்டு விட்டது !
பார்த்தார் முன்சீப் !இனி தன் .அஸ்திரங்களுக்கு வேலை வந்து விட்டது என்று எண்ணினார்! தலையாரி அந்த அரிவாளை எடு என்றார் முன்சீப் !
பண்ணையார் பதறி எழுந்தார் !மரியாதையை எதிர்பார்த்து மரணத்தை எதிர் கொண்டு விட்டோமோ என்று உள்ளூர பயந்தார் ! அரிவாளால் போட்டு விடுவரோ ? என்று ஓட பார்த்தார் பண்ணையார் !
அவரை போட்டு விட்டு ஜெயிலுக்கு போக முன்சீப் முட்டாளா என்ன ? முன்சீப் தலையாரியின் கையில் அரிவாளால் ஒரு கீறு கீறினார் !ரத்தம் சீறி வந்தது !
பண்ணையாருக்கு தன்னை வெட்டாமல் தலையாரியை ஏன் வெட்டினார் என்று புரியவில்லை !
அடுத்ததாக முன்சிப் ஒரு வேலை செய்தார் ! தன்னிடமுள்ள ரசீது புஸ்தகத்தை கிழிப்பது போல பாவனை செய்து ரசீது புஸ்தகத்தின் அட்டையை இரண்டாக கிழித்தார் !
முன்சீப்புக்கு புத்தி பிசகி விட்டதோ என்று பண்ணையாருக்கு சந்தேகம் வந்து விட்டது !
முன்சீப்பின் ஒவ்வொரு செய்கையை பார்த்ததும் பண்ணையாருக்கு என்ன செய்வது என்ன சொல்வது ஒன்றும் புரிய வில்லை ! அமாவாசை அன்று நடு சாமத்தில் தனியாக மயானத்தில் நிற்பது போல தவித்தார் !
மூன்றாவதாக ஒரு பிரம்மாஸ்திரத்தை ஏவினார் முன்சீப் !
யோவ் !பண்ணையாரே வசூல் செய்ய வந்த என் தலையாரியை வெட்டி இருக்கிறீர் அதுஒரு குற்றம் ! சர்க்கார் வேலையை செய்ய விடாமல் தடுத்து விட்டீர் ! ரசீது புஸ்தகத்தையும் கிழித்து விட்டீர்! அடுத்ததாக நான் வசூல் செய்து வைத்திருந்த சர்க்கார் பணத்தையும் புடுங்கி கொள்ளைஅடித்து விட்டீர் ! இந்த நான்கு குற்றங்களுக்கும் என்ன தண்டனை தெரியுமா ? ஏழு வருஷம் ஜெயில் தண்டனை! உம்மை ஜெயிலை தள்ளலை என்றால் என் வேலையை ராஜினாமா செய்து விடுகிறேன் என்றார் முன்சீப்!
பண்ணையாருக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது ! பூனைன்னு புடிக்க போய் அது புலியால்ல இருக்கு ! எறும்பு புற்றுன்னு கை விட அது பாம்பு புற்றா மாறிட்டுதே என்று எண்ணினார் !
நா நேரே போலீஸ் ஸ்டேசனுக்குதான் போறேன் ! போலீஸ் வரும் ரெடியா இரும் என்று சொல்லி விட்டு முன்சீப் போய் விட்டார் !
பண்ணையார் நிலை கொள்ளாமல் தவித்தார் !இன்னைக்கு யார் முகத்தில் விழித்தோம் என்று எண்ணினார் !யார் முகத்தை சொன்னாலும் அது வேறு சிக்கல் !
நேரே கிராம கர்ணத்திடம் போனார் ! நடந்ததை எல்லாம் சொன்னார் !கர்ணம் வயதில் பெரியவர் !அனுபவஸ்தர் ! பண்ணையார் வருவதற்கு முன்பே முன்சீப் கர்ணத்திடம் நடந்ததை சொல்லி விட்டார் !போலிசுக்கு போக வேண்டாம் !நீர் வீட்டில் இரும் !நான் பேசிக்கொள்கிறேன் என்று கூறி அனுப்பி விட்டார் ! அது பண்ணையாருக்கு தெரியாது !
இப்போது பந்து கர்ணம் கைக்கு வந்து விட்டது ! போலிசுக்கு போனா பண்ணையாருக்கு மட்டுமல்ல ஊருக்கே அவமானம் ! அதே நேரத்தில் இதை அப்படியே விட்டால் கர்ணம் முன்சீப் இருவருக்கும் ஊரில் மதிப்பு இருக்காது !கர்ணம் மனசுக்குள் கணக்கு போட்டார் !
ஐயா !முன்சீப் ரொம்ப கோபமா இருக்கார் !நான்தான் அவரை போலிசுக்கு போகாமல் தடுத்து வைத்திருக்கிறேன் ! கேசுன்னு போனா ஏழு வருஷம் உள்ள போகணும் ! நீங்க செஞ்சது கடுமையான குற்றம் ! நீங்க என்ன நினைக்கீங்க ன்னு அவரை ஆழம் பார்த்தார் !
ஆழம் பாக்க கூடிய நிலையில் அவர் மனம் இல்லை .அது தூர்ந்து போய் விட்டது பூரண சரண்டர் நிலையில் இருந்தார் !நீங்க என்ன சொன்னாலும் நா கேட்டுக்கிடுதேன் ! இனி பஞ்சாயத்து துப்பரவு தொழிலாளி வந்தாலும் எந்திருச்சு நின்னு வரவேற்பேன் என்றார் !
அதற்கு மேலும் கர்ணம் அவரை சங்கப்படுத்த விரும்பவில்லை !இதுவே 1 அவர் ஆயுளுக்கும் போதும் என்று எண்ணினார் !
அந்த ஊர் அம்மன் கோயிலுக்கு ரொம்ப நாளா கோபுரம் இல்லாமல் இருந்தது இது தான் சமயம் என்று எண்ணி அந்த கோபுரத்தை அவர் செலவில் கட்டி கொடுக்க சொல்லி விட்டார் ! .அவரும் ஆளை விட்டால் போதும் என்று எண்ணி கட்டி கொடுத்து விட்டார் !
பண்ணையார் லேசில் காசை இளக்க மாட்டார் ! அம்மன் விளையாடிய விளையாட்டு இது என்று கூறுகிறார்கள் ஊர்மக்கள் !