Friday, 24 July 2015

பொய்யும் பொய்யும் சேர்ந்தால் நன்மை என்று அர்த்தம் !

               
படம் கூகுள் 
  நான் வருவாய் துறையில் பணி புரிந்த சமயம்! தமிழ்நாடு  சர்வீஸ் கமிசன் பரீட்சை அடிக்கடி  நடக்கும் ! அதற்கு  பள்ளிகூடங்களில் இடம் வாங்க வேண்டும் ! அந்த காலத்தில் ஒரு நபர் பரீட்சை எழுதுவதற்கு பள்ளிக்கூடத்திற்கு  ஐம்பது பைசா சர்வீஸ் கமிசனில் இருந்து கொடுப்பார்கள் என்று நினைக்கிறேன்  !
    500 பேர் எழுதினாலும்   250 ரூபாய்தான் கிடைக்கும் ! அதனால் ஸ்கூல் காரர்கள் விரும்ப மாட்டார்கள்  ! பெஞ்சுகளை ஒழுங்கு படுத்தி போட வேண்டும் ! பரீட்சை எழுத வருவதற்கு முன் திறந்து வைக்க வேண்டும் ! அவர்கள் எழுதி முடித்து போகும் வரை காத்திருக்க வேண்டும் !குடி நீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் !இதெல்லாம் முடிந்தபின் திரும்பவும் பென்ச் டெஸ்க் இவைகளை ஒழுங்கு படுத்த வேண்டும் ! இதனால் ஸ்கூலில்  இடம் தர மாட்டார்கள் !ஆனால்  அதிகாரிகள்  எங்களை  விட மாட்டார்கள் !எப்படியாவது வாங்கி வர வேண்டும் என்று உத்தரவு போட்டு விடுவார்கள் ! நாங்கள்  மத்தளம் மாதிரி  இரண்டு  பக்கமும்  அடி வாங்க வேண்டும் !
  கம்பும் ஒடியக்கூடாது பாம்பும்  சாகனும் !சண்டையும் போடக்கூடாது ! சீட்டும்  வாங்கணும் !கயிறு மேல் நடக்கும்  வித்தை மாதிரித்தான் ! நாங்க  சர்க்கஸில் வேலைக்கு  போனால் உடனே  எடுத்துக்குவாங்க ! அவ்வளவு  வேலையும் தெரியும் ! தெரியலையின்னா  வேலை பாக்க முடியாது !
                             
                                         படங்கள் கூகுள் 
           ஆபிசுக்கு பக்கத்திலுள்ள ஸ்கூல்ல  போய்  சீட்  கேக்க போனோம் !சாயந்திர நேரம் !  HM  ஆபிஸ் முன்  நாலைந்து பேர் நின்று  பெசிக்கொண்டு இருந்தனர் ! HM  இருக்காங்களா? என்று  கேட்டோம் ! நாங்க எதற்கு வந்திருக்கிறோம் என்பதை தெரிந்து கொண்டார்கள்  போலும் ! பாம்பின்  கால் பாம்பறியாதா  என்ன?   ஊருக்கு போயிருக்காங்க ! வர ரெண்டு  நாளாகும்  என்றனர் !சரி வந்தவுடன் பார்க்க வருகிறோம் என்று சொல்லி திரும்பினோம்!    எங்களுடன் வந்த ஒருவர் HM  அவர்களுடன்  நிற்கிறார்! உங்களிடம் பொய் சொல்லுகிறார்கள்  என்றார் ! 
  அவர்கள் நம்மிடம்பொய் சொல்லுகிறார்கள் !இனி நாம் வேற ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டியதுதான்  என்று நினைத்து  திரும்ப அவர்களிடம்  " சார்  விஷயம் வேறொன்றுமில்லை !  உங்க  பள்ளிகூட   காம்பவுண்டு  சுவர்  புறம்போக்கில் இருப்பதாக புகார் வந்திருக்கு ! நாளை அதை  அளந்து பாக்க சர்வேயர்  வாரார் !அதை சொல்லிட்டு போகத்தான்  வந்தோம்!'  என்று சொல்லிவிட்டு திரும்பினோம் ! அதற்குள் அவர்கள் நிலவரம் கலவரமாகி விட்டது ! சார் சார் என்று பின்னாலேயே வந்தார்கள் ! சார் எங்களை மன்னிச்சுடுங்க ! நீங்க யாரென்று  தெரியாம பொய் சொல்லிட்டோம் ! இவர்தான் HM !  காம்பவுண்டு சுவர அளந்தா பள்ளிக்கூடம் பேர் கெட்டுடும் ! பிள்ளைகள்  வராது !தயவு செஞ்சு அதை நிப்பாட்டுங்க என்றனர் !  
  சார்! நீங்க சர்க்காரை மதிச்சா சர்க்கார் உங்களை மதிக்கும் என்றேன் !
  உடனே  நாற்காலி  கொண்டு வந்து போட்டு உக்கார சொன்னாங்க ! உங்களுக்கு என்ன உதவி செய்யணும் சொல்லுங்க செய்யுறோம் ! என்றனர் !
 பப்ளிக் சர்விஸ் கமிசன் பரீட்சை எழுத 500  பேருக்கு  அனுமதி வேண்டும் என்றோம் !
  உடனே எழுதி கையெழுத்து போட்டு சீல் வைத்து கொடுத்து விட்டனர் ! 150 பேருக்கு கிடைக்குமா என்று கவலையோடு போன எங்களுக்கு 500  பேருக்கு 
சீட் கிடைக்க  காரணம் அவங்க சொன்ன பொய்யும் நாங்க சொன்ன பொய்யும் தான்  !
 வள்ளுவர் சொன்னது போல  நாங்கள் சொன்ன  பொய்யும் இந்த இடத்தில வாய்மைதான் !யாருக்கும்  கெடுதல் இல்லை !பல  மாணவர்களுக்கு பரீட்சை எழுதும் நன்மை கிடைத்தது ! வாழ்க சமயோசிதம் !
                                                       
  

Wednesday, 22 July 2015

ரெவினியூ ரெக்கவரி

             
   நான் கிராம நிர்வாக அதிகாரியாக பல  ஆண்டுகளுக்கு  முன்பு பணி புரிந்தேன் ! பல வரிகளுடன் ரெவின்யூ ரெக்கவரி என்று, அதாவது  அரசாங்கத்துக்கு வர வேண்டிய பாக்கிகளையும்  அரசாங்க துறைகளில் இருந்து மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பாக்கிகளையும் வசூல் செய்ய வேண்டும்! .இதில் பொதுப்பணி துறை ஒன்றிலிருந்து ஒரு ஏழை பெண்ணுக்கு மொத்தமாக ஒரு தொகை     வர வேண்டும் என்றும்  அது  பல மாத காலமாக கொடுக்க படவில்லை என்றும்  தெரிய வந்தது !
       நான் அந்த பெண்ணை  அழைத்து விசாரித்தேன் ! அவளின் கணவர் கூலி தொழிலாளியாக வேலை  பார்த்தார் என்றும் கல் உடைக்க வெடி வைக்கும்  போது ஒரு பெரிய கல் அவர் தலையில்  விழுந்து அவர் இறந்து விட்டார் என்றும் தெரிந்தது !அதற்கு நஷ்ட ஈடாக அந்த துறையில் இருந்து  அவர் மனைவிக்கு மொத்தமாக ஒரு தொகை  சாங்ஷன் ஆகி இருப்பதாக தெரிய வந்தது ! இதற்குத்தான் அவள் அலைந்து கொண்டிருக்கிறாள்  .கடைசியாக ரெவின்யூ ரெக்கவரியாக என் கைக்கு வந்து சேர்ந்தது !
      அந்த பெண்ணுக்கு இரண்டு  பெண் குழந்தைகள்!சின்ன குழந்தைகள் ! .சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது அவளால்  எங்கே படிக்க வைக்க முடியும்?  அந்த பெண்ணிடம் பத்து நாட்களில் அந்த பணம் கிடைக்க  ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி அனுப்பி வைத்தேன் ! எனக்கு ஒரே கவலை ! அரசாங்க துறை சம்பந்த பட்டது! வசூல் செய்வது மிகவும் கஷ்டம் ! கல்லில் நார்  உறிக்கும் கதைதான் ! மன உளச்சலி்ல் இருந்தேன் ! திடிரென்று ஒரு யோசனை  தோன்றியது ! நேரே தாசில்தாரிடம் சென்று "சார் அந்த பெண் வறுமையில் வாடிக்கொண்டு இருக்கிறாள் .அவளது இரண்டு சிறு பெண்களும் சாப்பாட்டுக்கே வழி இன்றி படிக்க வைக்கவும் முடியாமல் கஷ்டபடுகிறார்கள் ! தலையில் எண்ணை வைத்தே  பல  மாதங்கள்  ஆகி இருக்கும் போல தெரிகிறது அதனால் நான் ஒரு யோசனை செய்திருக்கிறேன் ! அதை உங்களிடம் கூறி  அனுமதி கேட்க வந்தேன்" என்று அவரிடம் அந்த யோசனையை  சொன்னேன்!
     
ஏழைக்கு உதவி செய்வது பெரும் புண்ணியம் ! நீங்கள்  தாராளமாக செய்யுங்கள் !நான் வேண்டிய உதவி செய்கிறேன் என்று கூறினார்
  அடுத்த மாதம் ஒன்றாம் தேதி நானும் என் நண்பர்களான கிராம நிர்வாக  அதிகாரிகள் சிலரும் எங்களிடம் வேலை பார்க்கும் தலையாரிகளும்  அந்த அலுவலகத்துக்கு சென்றோம் ! அன்று ஒன்றாம் தேதி! ஆகையால் சம்பளம்  வாங்க எல்லோரும் ஆஜராகி இருந்தனர் !
 எங்களை கண்டதும் என்ன சார் கூட்டமாக வந்திருக்கிறீர்கள்?  என்று அசட்டையாக கேட்டனர் !  "ஒரு ஏழை பெண்ணுக்கு உங்கள் அலுவலகத்தில் இருந்து நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் ! பல மாதங்களாக அலைந்து கொண்டிருக்கிறாள் ! அதை வசூல் செய்ய வந்திருக்கிறோம்" என்று நான் சொன்னேன் ! அவர் "சார் நாங்கள் எழுதி அனுப்பி இருக்கிறோம் !வந்ததும் கொடுத்து விடுவோம்! அதற்கு சில மாதங்கள் ஆகும்" என்றார் !
  நான் உடனே "சார் உங்கள் அலுவலகத்தை ஜப்தி  செய்யும்படி உத்தரவு வந்திருக்கறது ! பின்னால் லாரிகள் வருகின்றன ! பத்திரிகைக் காரர்களும் வருகிறார்கள் !இன்று மாலை பேப்பர்களில்  உங்கள் அலுவலகம் ஜப்தி செய்த செய்தி வரும்" என்றேன் ! 
அவ்வளவுதான்! அசால்டாக இருந்த அனைவரும் அலார்ட்டானார்கள் ! அப்பொழுது  மொபைல் வரவில்லை ! எனவே தொலை பேசியில் செய்திகள் பறந்தன ! சிறிதுநேரத்திற்குள் சர் சர்ரென்று ஜீப்புகள் பறந்து வந்தன ! எல்லோரும் உள்ளே போய் ஆலோசனை செய்தனர் ! பின்பு என்னை கூப்பிட்டு பத்து நாள்  டைம் கொடுக்க முடியுமா என்று கேட்டனர் !  அதற்கு நான் சார் எங்கள் நிலை உங்களுக்கு தெரியாததில்லை ! ஒன்று வசூல் செய்ய வேண்டும்! இல்லை என்றால் ஜப்தி செய்ய வேண்டும்! என்ற நிலையில்  நாங்கள் இருக்கிறோம் என்றேன் ! மறுபடியும் உள்ளே போய் ஆலோசனை செய்தார்கள் ! யார் யாருக்கெல்லாமோ  டோஸ்கள் விழுந்தன !
                                                       
  திரும்பவும் என்னை கூப்பிட்டு  "சார் இந்த விஷயம்  இதுவரை  எங்கள்  கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை ! எப்படியாயினும்  இன்று  மாலை ஐந்து மணிக்கு செக்  கொடுத்து விடுகிறோம்" என்றனர் ! ரொம்ப தேங்க்ஸ் சார் என்று கூறி விட்டு தாசில்தாரிடம் விபரத்தை சொன்னேன்!அந்த பெண்ணையும் பிள்ளைகளோடு வரச்சொல்லி தகவல் கொடுத்தேன் !
   மாலை ஐந்து மணிக்கு எல்லோரும் அந்த அலுவலகம் சென்றோம் ! முதன்மை அதிகாரி செக்கை தாசில்தாரிடம் கொடுக்க அவர் அதை அந்த பெண்ணிடம் கொடுத்தார் ! அந்த பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்கும் படி கூறி வாழ்த்தினோம் !
                                                 
 பல வருடங்களுக்கு பிறகு அந்த இரண்டு பெண்களையும் ஒரு விழா நிகழ்ச்சியில்  சந்திக்க நேர்ந்தது !இரண்டு பேரும்  நன்றாக படித்து பெரிய பதவிகளில் இருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் !
                                                   
                                                 

Tuesday, 21 July 2015

சாமி சைவமா ,அசைவமா !

படம் கூகுள் 

         எங்கள் ஊரில்   கருப்பசாமி கோயிலில்  பல  ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் ! ஆண்டு  தோறும் அந்த கோயிலில் இரண்டு  நாட்கள் கொடை விழா நடக்கும் !சுத்து பட்டு ஊர்களில் இருந்து ஆணும் பெண்ணும் குவிந்து  விடுவார்கள் ! முதல் நாள் தீர்த்த வாரி நடக்கும் ! இரண்டாவது  நாள் ஆட்டம் பாட்டம் ஆடுகள் பலி கொடுத்து  வேண்டுதலை நிறைவேற்றும் நிகழ்ச்சி என நடக்கும் !
   வில்லு பாட்டுகாரர்கள்  ஒருபக்கம் கருப்பசாமி கதையை சொல்லிக்கொண்டு இருந்தார்கள்!
                             

          மற்றொரு பக்கம் நையாண்டி மேளத்தை வாசித்துக் கொண்டிருந்தார்கள் ! ஓன்று கம்பு ஒடியனும்  இல்ல தவுலு கிழியனும் என்று ஆக்ரோசமாக அடித்து துவைத்து கொண்டிருந்தார்கள்! நாதஸ்வரக்காரர்களும், தன் பங்குக்கு குலுக்கள்  டான்ஸ்  பாட்டுக்களாக  வாசித்து ஜனங்களின் காது ஜவ்வை கிழத்துக் கொண்டிருந்தார்கள்! இதற்கெல்லாம்  ஈடு கொடுத்து கரகாட்டக் காரிகள் ஆடிக்கொண்டிருந்தர்கள் ! அவர்களை சுற்றி  இளைஞா்கள் கூட்டம் !\
கரகாட்டக்காரிகளின் ஜாக்கெட்டில் ரூபாய் நோட்டுக்களை குத்துவதில்  இளைஞர்களிடையே போட்டா போட்டி நடந்து கொண்டிருந்தது

                               

படம் கூகுள்  
        இதற்கு இடையே கூட்டத்தையும் சத்தத்தையும்  கேட்டு  ஆடுகள் எல்லாம் மிரண்டு போய்  மே  மே  என்று கத்திக் கொண்டிருந்தன ! எல்லாம் முடிந்து  ஆடுகள் வெட்டும் நிகழ்ச்சி தொடங்கியது ! பூசாரி  அரிவாளை ஓங்கி பிடித்து கொண்டிருந்தார் !அவர் வெட்டும்போது  ஒரே வெட்டில் ஆட்டின்  தலை துண்டாக  விழ  வேண்டும் ! அப்படி  ஆட்டின்  தலை துண்டாக போய் விழாமல் தொங்கி கொண்டிருந்தால் ஆட்டின் சொந்தக்காரர் குடும்பத்திற்கு கஷ்டம் வரும் என்று ஐதீகம்! அதனால்  பூசாரி கனத்த அரிவாளை நன்றாக கூர் தீட்டி  வைத்திருந்தார் !
                                                
படம் கூகுள் 
           பூசாரி அரிவாளை சாமி  முன் வைத்து கும்பிட்டு  ஆடுகளை வெட்டுவதற்கு தயாராக  அரிவாளை  ஓங்கியபடி நின்று கொண்டிருந்தார் ! ஒவ்வொருவரும் தங்கள்  ஆட்டை  கையில் பிடித்தபடி  நின்று கொண்டிருந்தார்கள் ! பூசாரி முன்பு  இரண்டு  ஊர்  தலைவர்கள் தங்கள்  ஆட்டைத்தான்  முதலில்  வெட்ட வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி கொண்டிருந்தார்கள் !ஒருவர் தன்  ஊரில்தான் தலைக்கட்டு அதிகம்! அதனால் தன்  ஆட்டைத்தான்   முதலில் வெட்ட  வேண்டும்  என்றார் !அடுத்தவர் தன் ஊர்தான் ஆதி காலம்  முதலே  இந்த  கோயிலுக்கு  வருகிறவர்கள் ! எனவே  தங்கள்  ஊர்தான்  பரம்பரையில்  மூத்தவர்கள் !எனவே தன் ஆட்டைத்தான்  முதலில் வெட்ட வேண்டும் என்றார் ! முதலில் ஒருவர்  தன்  ஆட்டை நீட்டுவார் !பூசாரி  அரிவாளை  ஓங்கும்போது இவர்  ஆட்டை தள்ளி விட்டு தன் ஆட்டை நீட்டுவார் ! இப்படியே  இருவருக்குள்ளும்  இழுபறி போட்டி  நடந்து கொண்டிருந்தது ! பூசாரி  அரிவாளை  ஓங்குவதும் இவர்கள்  தள்ளு முள்ளை  பார்த்து நிறுத்துவதுமாக  நேரம்  ஓடிக்கொண்டு இருந்தது ! பூசாரிக்கு  அருள்  கூடிக்கொண்டே இருந்தது! கண்கள் செவ்வசெவேரென மாறி விட்டன ! இறுதியில் அவர் ஒரு  முடிவெடுத்தார் ! அரிவாளை ஓங்கி வெட்டுவோம் !யார் ஆடு  வெட்டு  பட்டாலும் சரி !
        அதே  போல  அரிவாளை எட்டு மட்டும் உயர்த்தி ஒரே வெட்டாக வெட்டிவிட்டார் ! 
\  கீழே  உருண்டு ஓடுயது  மனிதனின் தலை !தலைக்கட்டு  அதிகம்னு சொன்னாரே அவர்   தலை!  போட்டியில் நீட்டுபோது  ஆட்டின்  தலைக்கு  மேலாக தன்  தலையையும் சேர்த்து  நீட்டி  விட்டார் !
     அவ்வளவு தான்! பூசாரி இந்த  பூலோகத்தை விட்டே  மறைந்து விட்டார்!  அவர் எப்படி  மாயமானார் என்று யாராலும்  கண்டுபிடிக்க முடிய வில்லை !பாரம்பரிய  ஊர்க்காரர் பாரம்பரியத்தை எல்லாம்  விட்டு விட்டு  பறந்து விட்டார் !
     அங்கிருந்த போலீஸ்காரர் கதவை  மூடுங்கள் ! கதவை  மூடுங்கள் என்று  கூப்பாடு போட்டார் !அவர்  கூப்பாட்டை  கேட்டதும் மீதம் இருந்தவர்களும் ஒரு கதவை அடைத்து மறு  கதவை அடைப்பதற்குள் இடுக்கு வழியே பாய்ந்து  பறந்தனர் !  வில்லு  பாட்டுகாரர்கள் இந்த  வில்லங்கமான வில்லேஜை விட்டு  சீக்கிரம் போக வேண்டும் என்று அந்த வில்லையே ஆயுதமாக கீழே ஊன்றி காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்தனர் !குடம் அடிப்பவர் இதற்குதான்  அந்த  காலத்தில் குடம் கண்டு பிடித்திருக்கிறான் என்று எண்ணி குடத்தை கீழே வைத்து அதன் மேல் ஏறி சுவரை தாண்டி குதித்தார் !  கரகாட்டக்காரிகள்  எந்த கிரகத்துக்கோ போய் விட்டார்கள் ! நையாண்டி  மேளக்காரர் தன் நிலைமை இப்படி நையாண்டி ஆகிவிட்டதே என்று பதைத்து   ஓடி வந்து  அந்த  மேளத்தோடே சுவரை  தாண்டி  குதித்து விட்டார் ! தனக்கு இவ்வளவு பலம் இருக்கிறதா என்று அவருக்கே ஆச்சரியம் !நாதஸ்வரக்காரர் பார்த்தார் ! தான் மட்டும்  மாட்டிக்கொண்டால் தன்னை நொங்கு எடுத்து விடுவார்கள் என்று பயந்து சுவரில் ஏறுவதற்கு முயன்று கொண்டிருந்த ஒருவன் தலையை  மிதித்து ஏறி அந்த பக்கம் குதித்து விட்டார் !
     இவ்வளவு களேபரங்களும் நடந்து முடிந்து போலீஸ்காரர் மட்டும்தான் அங்கு இருந்தார் !ஈ, காக்கை கூட அந்த பக்கம் வரவில்லை !
         சில  நாட்களில் பூசாரி மற்றும் சிலரை  கைது பண்ணி விசாரித்தனர்! சில  மாதங்கள்  கேஸ் நடந்தது ! சாட்சியம் எதுவும் இல்லை என்று கூறி நீதிபதி கேசை தள்ளுபடி செய்து ஒரு உத்தரவு பிறப்பித்தார் ! இனி இது போன்ற நேரங்களில்  கூடுதல் போலிஸ் போட்டு வரிசையில் நின்று ஆட்டை வெட்ட  ஏற்பாடு செய்ய வேண்டும்  என்று !

      அதற்கு  முன்பே அந்த கோயில் நிர்வாகிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு தீர்மானம் போட்டு விட்டார்கள் !  ஆடு வெட்டுவது கருப்பசாமிக்கு பிடிக்க வில்லை ! அதனால்தான் மனிதனை காவு  வாங்கி விட்டார் ! இனி கருப்பசாமிக்கு பலி  கொடுக்க கூடாது என்று !
         அந்த வருடம் முதல் கருப்பசாமி  சைவமாக  மாறிவிட்டார் !
                                                                 

Thursday, 16 July 2015

பணம் வந்தாலும் பணிவும் வர வேண்டும்

 

 சும்மாவே  ஆடுபவர் அந்த கிராம முன்சீப் ! காலில் வெந்நீரும்  கொட்டினால்  எப்படி  ஆடுவார் ?  அப்படித்தான்  அன்று நடந்தது !
     அந்த  ஊரில்  சிறு   மில்லும், பெரும் நிலபுலன்களும் உள்ள பண்ணையார்     அவர்  ! மில்லை இவர் பையன்கள் பார்த்து கொள்கிறார்கள் !  இவர்  தோட்டம் துரவுகளை  பார்த்து கொள்கிறார் !கொடுக்கல்  வாங்கலும் உண்டு !வழக்கம் போல தோட்டத்தை  மேற்பார்த்து கொண்டிருந்தார் !சுமார்  நூறு  ஆணும் பெண்ணும் வேலை  பார்த்துக்  கொண்டிருந்தார்கள் ! அந்த  நேரம்  பார்க்க முன்சீப் தலையாரிகளுடன்  வசூலுக்கு வந்தார் ! பண்ணையாருக்கு   சனி  உச்சத்தில் இருந்த நேரம் போலும்  !
  தலையாரிகளில் ஒருவர் போய் பண்ணையாரிடம்   ஐயா !கிராம முன்சீப் வந்திருக்காக  என்றார் ! அவர் ஒரு புழுவை பார்ப்பது போல பார்த்து விட்டு பேசாமல் இருந்து விட்டார் !
   முன்சீப்போ மரியாதையை  விட்டுக்கொடுக்க மாட்டார் ! தன்னை பார்த்ததும்  எழுந்து நின்று வரவேற்காததோடு , தன்னை உக்காரவும் சொல்ல வில்லை ! அவருக்கு  ரத்த கொதிப்பு டாப்புல ஏற ஆரம்பிச்சது ! ஏற்கனவே கண்ணு இரண்டும் சிவப்பா இருக்கும் ! இப்போது ரொம்ப சிவப்பாயிட்டது !
 கோபமா தலையாரியை பார்த்தார் ! தலையாரி திரும்பவும் பண்ணையாரிடம் போய் ஐயா ! கிராம முன்சீப் வந்திக்காக ! என்றார் ! அப்பவும் கல்லு மாறி
  இருந்தார் ! எந்த  அசைவும் அவரிடம்  இல்லை !
    தலையாரி தானே வந்து சொல்லுகிறான் ! முன்சீப் வந்து தனக்கு வணக்கம்  போடவில்லையே என்று பண்ணையார்  எண்ணியிருக்கிறார்! பண்ணையார்  தனக்கு  வணக்கம் போடலையே என்று முன்சீப் எண்ணி இருக்கிறார் !
 இருவுக்குள்ளும் டக்கப் வார் நடந்து கொண்டிருந்தது !
   மூணாவது தடவையும் தலையாரி போய் சொன்ன போதும் பருவ  நிலை  மாற வில்லை !புயல்  அங்கேயே  மையம் கொண்டு விட்டது !
பார்த்தார்  முன்சீப் !இனி  தன் .அஸ்திரங்களுக்கு  வேலை   வந்து விட்டது என்று எண்ணினார்! தலையாரி  அந்த அரிவாளை எடு  என்றார் முன்சீப் !
பண்ணையார்  பதறி எழுந்தார் !மரியாதையை  எதிர்பார்த்து  மரணத்தை எதிர்  கொண்டு  விட்டோமோ   என்று  உள்ளூர  பயந்தார் ! அரிவாளால் போட்டு விடுவரோ  ? என்று ஓட பார்த்தார் பண்ணையார் !
 அவரை போட்டு விட்டு  ஜெயிலுக்கு போக  முன்சீப் முட்டாளா என்ன ? முன்சீப்  தலையாரியின் கையில் அரிவாளால்  ஒரு கீறு கீறினார் !ரத்தம்  சீறி வந்தது !
பண்ணையாருக்கு தன்னை வெட்டாமல் தலையாரியை  ஏன் வெட்டினார் என்று புரியவில்லை !
அடுத்ததாக முன்சிப் ஒரு வேலை செய்தார் ! தன்னிடமுள்ள ரசீது புஸ்தகத்தை கிழிப்பது போல  பாவனை செய்து ரசீது  புஸ்தகத்தின் அட்டையை இரண்டாக  கிழித்தார் !

 முன்சீப்புக்கு  புத்தி  பிசகி  விட்டதோ  என்று பண்ணையாருக்கு  சந்தேகம் வந்து  விட்டது !
  முன்சீப்பின்  ஒவ்வொரு செய்கையை பார்த்ததும்  பண்ணையாருக்கு  என்ன செய்வது  என்ன சொல்வது ஒன்றும் புரிய வில்லை !  அமாவாசை அன்று   நடு சாமத்தில்  தனியாக    மயானத்தில் நிற்பது  போல  தவித்தார் !
  மூன்றாவதாக ஒரு  பிரம்மாஸ்திரத்தை ஏவினார் முன்சீப் !

  யோவ் !பண்ணையாரே வசூல்  செய்ய வந்த என் தலையாரியை  வெட்டி இருக்கிறீர்  அதுஒரு குற்றம் ! சர்க்கார் வேலையை  செய்ய விடாமல் தடுத்து விட்டீர் ! ரசீது புஸ்தகத்தையும் கிழித்து விட்டீர்! அடுத்ததாக நான் வசூல் செய்து வைத்திருந்த சர்க்கார் பணத்தையும்  புடுங்கி கொள்ளைஅடித்து விட்டீர் !   இந்த நான்கு    குற்றங்களுக்கும்  என்ன தண்டனை தெரியுமா ?    ஏழு வருஷம்  ஜெயில் தண்டனை! உம்மை ஜெயிலை  தள்ளலை  என்றால் என் வேலையை ராஜினாமா செய்து விடுகிறேன் என்றார் முன்சீப்!

  பண்ணையாருக்கு  சப்த நாடியும் ஒடுங்கி  விட்டது ! பூனைன்னு புடிக்க போய் அது புலியால்ல இருக்கு  ! எறும்பு  புற்றுன்னு கை விட அது  பாம்பு  புற்றா மாறிட்டுதே   என்று எண்ணினார் !
நா  நேரே போலீஸ்  ஸ்டேசனுக்குதான்  போறேன் ! போலீஸ்  வரும்  ரெடியா இரும் என்று சொல்லி விட்டு முன்சீப்  போய் விட்டார் !
  பண்ணையார்  நிலை  கொள்ளாமல்  தவித்தார் !இன்னைக்கு யார் முகத்தில்  விழித்தோம்  என்று  எண்ணினார் !யார் முகத்தை  சொன்னாலும்  அது வேறு சிக்கல் !
 நேரே கிராம கர்ணத்திடம்  போனார் ! நடந்ததை எல்லாம் சொன்னார் !கர்ணம் வயதில் பெரியவர் !அனுபவஸ்தர் ! பண்ணையார் வருவதற்கு முன்பே முன்சீப் கர்ணத்திடம் நடந்ததை சொல்லி விட்டார் !போலிசுக்கு  போக  வேண்டாம் !நீர் வீட்டில் இரும்  !நான் பேசிக்கொள்கிறேன் என்று கூறி அனுப்பி விட்டார் ! அது பண்ணையாருக்கு தெரியாது !
                                               
 இப்போது  பந்து கர்ணம் கைக்கு வந்து விட்டது ! போலிசுக்கு  போனா  பண்ணையாருக்கு மட்டுமல்ல  ஊருக்கே  அவமானம் ! அதே நேரத்தில் இதை  அப்படியே விட்டால் கர்ணம் முன்சீப் இருவருக்கும்  ஊரில்  மதிப்பு இருக்காது !கர்ணம் மனசுக்குள் கணக்கு போட்டார் !
 ஐயா !முன்சீப் ரொம்ப கோபமா இருக்கார் !நான்தான் அவரை போலிசுக்கு போகாமல் தடுத்து வைத்திருக்கிறேன் ! கேசுன்னு போனா ஏழு வருஷம் உள்ள போகணும் ! நீங்க செஞ்சது கடுமையான குற்றம் ! நீங்க என்ன நினைக்கீங்க ன்னு  அவரை ஆழம் பார்த்தார் !
 ஆழம் பாக்க கூடிய நிலையில் அவர் மனம் இல்லை .அது தூர்ந்து போய் விட்டது பூரண  சரண்டர்  நிலையில்  இருந்தார் !நீங்க என்ன சொன்னாலும் நா கேட்டுக்கிடுதேன் ! இனி பஞ்சாயத்து துப்பரவு  தொழிலாளி வந்தாலும் எந்திருச்சு நின்னு வரவேற்பேன் என்றார் !
அதற்கு மேலும் கர்ணம்  அவரை சங்கப்படுத்த விரும்பவில்லை !இதுவே 1 அவர்  ஆயுளுக்கும் போதும் என்று எண்ணினார் !
 அந்த ஊர் அம்மன்  கோயிலுக்கு ரொம்ப  நாளா கோபுரம்  இல்லாமல் இருந்தது இது தான் சமயம் என்று எண்ணி   அந்த  கோபுரத்தை அவர் செலவில் கட்டி கொடுக்க சொல்லி விட்டார் ! .அவரும்  ஆளை விட்டால் போதும் என்று எண்ணி கட்டி கொடுத்து விட்டார் !
  பண்ணையார்  லேசில்  காசை  இளக்க மாட்டார் ! அம்மன் விளையாடிய  விளையாட்டு இது என்று கூறுகிறார்கள்  ஊர்மக்கள் ! 
                                                  

Wednesday, 15 July 2015

நாற்காலி செய்த வேலை !

    ஆனந்தம் பிள்ளை  அந்த ஊர் கிராம முன்சீப் ! அந்த நாளில் ஒவ்வொரு கிராமத்திற்கும்  கிராம முன்சீப் , கிராம  கர்ணம்  என இருவர் இருப்பர் !அவர்களுக்கு தெரியாமல் அந்த ஊரில் எதுவும் நடக்காது ! அன்னியர் பதிவேடு என்று ஒரு பதிவேடு இருக்கும் ! அந்த ஊருக்கு புதியவர்கள் யாராவது  வந்தால் அதில் பதியப்படும் ! இப்போது அந்த பதிவேட்டை அன்னியர்கள் கொண்டு போய் விட்டார்கள் போலும் !இப்போது  அந்த பதவிகள் நீக்கப்பட்டு விட்டாலும்  அந்த  காலத்தில் நடந்ததை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது !

   ஆனந்தம் பிள்ளைக்கு  என்று அந்த ஊரில்  தனி மரியாதை இருந்தது !அந்த ஊர் பண்ணையார் வீட்டுக்கு போனாலும் அவருக்கு மரியாதை உண்டு ! அவர் இறந்தபின்  அவர் மகன் காசிநாதன் என்பவருக்கு அந்த வேலை கிடைத்தது !அந்த  வேலை பரம்பரை வேலை !காலன் வந்து  கூட்டிக்கிட்டு போகும் வரை அந்த வேலை அவருடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் !  அவர் கண்ணை மூடிய உடன் ஆட்டோமாட்டிக்காக அவர் மகனுக்கு வேலை கிடைத்து விடும் !
  காசிநாதன் வேலை ஒப்புக்கொண்ட்வுடன் மரியாதை நிமித்தமாக  ஒருநாள் சுப யோக சுப தினம் பார்த்து பண்ணையார் வீட்டுக்கு போனார் ! அன்னைக்கு இருவருக்குமே படுபட்சி  சரி இல்லை போலும் ! இவர் போகும் பொது பண்ணையார் ராவணன் அரியாசனத்தில் இருந்தது போல இருந்தார் !ஆஜானுபாகுவான  பண்ணையார் குட்டையாக இருந்த காசிநாதனைப்பார்த்து  ஏளனமாக சிரித்து கொண்டார் ! காசிநாதன் ஐந்து அடிக்கு குறைவான உயரம் ! வயது குறைவு ! பண்ணையார் புடதியில் சனி ஏறி கொண்டதால் காசிநாதனை மதிக்கவில்லை ! இது தெரியாத அங்கிருந்த வேலைக்காரன் ஆனந்தம்பிள்ளைக்கு  போடுவது போல அவர் மகன் காசிநாதனுக்கும் ஒரு நாற்காலியை கொண்டு வந்து போட்டான் !  தீயில் கால் வைத்தது போல பண்ணையார் குதிக்க ஆரம்பித்து விட்டார் ! ஒன்னை யாருலே நாற்காலி போடச்சொன்னது ! அறிவிருக்கா ? சின்னப்பையனுக்கெல்லாம்  நாற்காலி  போடறீயே ! என் முன்னால அவன் உக்காருவானாடா !முட்டாப்பயலே !அவன் நிப்பான் ! நீ போ  என்றார் ! ஊசி சிறுசானாலும் உக்காரும்போது குத்தினால் வலி எப்படி இருக்கும்னு பண்ணையாருக்கு தெரியல !
  சிறுது நேரத்திலே காசிநாதன் திரும்பி விட்டார் ! அதிலுருந்து  வடக்க  தலை வச்சு படுத்தாலும் படுப்பாறே  தவிற  பண்ணையார் வீட்டு பக்கம் தலை வச்சு  படுக்க மாட்டார் !

                                             
  ஒரு நாள் பண்ணையாரின் தகப்பனார் இறந்து  விட்டார் .ஊரே திரண்டு வந்து விட்டது! மாவட்ட அதிகாரிகள் கூட வந்து  மாலை அணிவித்து சென்றார்கள் ! கிராமக் கர்ணமும் ஒரு மாலையை போட்டு விட்டு போனார் !ஆனால் முன்சீப் வரவே இல்லை !
    மாலை ஆறு மணிக்கு பாடியை தூக்க ஏற்பாடு ஆகி கொண்டிருந்தது ! அப்போது இரண்டு  போலீஸ் ஜீப் வந்து நின்றது ! பண்ணையாருக்கு ரொம்ப சந்தோசம் ! நமது தகுதி தெரிந்து மாவட்ட போலீஸே  மாலை போட வந்துட்டார்களே என்று ! சார்  வாங்க  வாங்க நீங்க எல்லாம் வருவீங்கன்னு நான் எதிர் பாக்கவே இல்லை என்றார் ! நாங்களும் எதிர் பாக்கலே என்றனர் போலிஸ் ! பண்ணையாருக்கு  ஒன்னும் புரியல ! என்ன சொல்றீங்க என்றார் ! உங்க தகப்பனார் உடலை  போஸ்ட் மாடம் செய்ய கொண்டு போறோம் என்றது போலீஸ் ! பண்ணையாருக்கு சர்வாங்கமும்  நடுங்க ஆரம்பித்து விட்டது !என்ன சார் சொல்றீங்க ?
  அவர் சாவில் மர்மம் இருப்பதாக எங்களுக்கு தந்தி வந்திருக்கு என்றது போலிஸ் 
அப்படி யார் சார் தந்தி கொடுத்தது ?
 உங்க ஊர் முன்சீப்தான்
அப்போதுதான் இதுவரை முன்சீப் வராத மர்மம் புரிந்தது!
அவர் வந்து எழுதி கொடுத்தால் தான் பாடியை எடுக்க முடியும் !இல்லை என்றால் போஸ்ட் மாடம் தான் செய்யணும்
 நாளா பக்கமும் ஆட்கள் பறந்தனர் !முன்சீப்பை கண்டு பிடிக்க முடிய வில்லை !பண்ணையாருக்கு சப்த நாடியும் ஒடிங்கி விட்டது !ஒரு சின்னப்பயல் நம்மை ஆட்டம் காண வைத்து விட்டானே !ஊரெல்லாம் அவரை பார்த்து சிரிப்பது போல அவருக்கு தோன்றியது !
 நேரம் போய்க்கொண்டிருந்தது !போலிஸ் பாடியை போஸ்ட் மாடத்துக்கு கொண்டு போகும் வேலையை தொடங்கியது !
பண்ணையாருக்கு கோபம் ஒரு பக்கம், அவமானம் ஒரு பக்கம், செய்வது அறியாது திகைத்து நின்றார் !
  அந்த நேரத்தில் முன்சீபை எங்கிருந்தோ கூட்டிக்கொண்டு வந்து விட்டனர் !
  பண்ணையார் முன்சீப்பிடம் ஒன்றும் கேட்க வில்லை ! போலிஸ் தான் ஏன் சார் இப்படி தந்தி  கொடுத்தீர்கள்? என்று கேட்டது !
   சார் எங்க அப்பா இறந்து எனக்கு வேலை கிடைச்சவுடன்   மரியாதை நிமித்தமாக இவரை பாக்க வந்தேன் ! வேலைக்காரன் நாற்காலி கொண்டு வந்து போட்டான்! இவர் அவனை கோபித்து நாற்காலியை திரும்ப கொண்டு போக சொல்லி விட்டார் ! சார் எனக்கு மரியாதை கொடுக்க வேண்டாம் !நான் வகிக்கும்  பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா ? அதான் அவருக்கு பதவி என்றால்  என்ன என்பதை காட்ட நினைத்தேன் என்றார் ! 
   அதன்பின் எல்லோரும் இருந்து பேசி முன்சீபிடமும் , பன்னையாரிடமும் ,ஊர் மக்கள் சிலரிடமும் எழுதி வாங்கி ஒரு வழியாக இரவு பதினோரு மணிக்கு காரியங்கள் முடிந்தன !
  அதன்பின்  பண்ணையார் வீட்டில் அவருக்கு முன் நிரந்தரமாக ஒரு நாற்காலி போடப்பட்டு வி்ட்டது !முன்சீப்பை தவிற வேறு யாரும் அதில் உட்க்கார கூடாது  என்று உத்தரவு போட்டு விட்டார்!
                                                     


Sunday, 12 July 2015

சுசீந்திரம் ஆஞ்சநேயர்

                                                        சுசீந்திரம்  ஆஞ்சநேயர்
   சுசீந்தரம்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது! முன்பு கேரளா மாநிலத்துடன் இருந்து பின்பு தமிழ் நாட்டுடன் இணக்கப்பட்டது.இந்திரன் அகலிகை விசயத்தில் சாபம் பெற்று இங்கே வந்து தான் சாபத்தை தீர்த்து சுத்தம் செய்து கொண்டதனால் சுசீ+ இந்திரம் என இப்பெயர் வந்தது என சிலர் கூறுகிறார்கள் ! மற்றும் சிலர் ஸ்ரீஇந்திரம்  என்ற பெயரே பழந்தமிழில் சிவிந்திரம் என்று மருவியது என்றும் அதுவே சிசீந்திரம் என அழைக்கபடுவதாகவும் கூறுகிறார்கள் .இன்றளவும் அர்த்தசாம பூஜையை இந்திரனே வந்து நடத்துவதாக ஐதீகம் !
  சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலய சுவாமி கோயில் உள்ளது .இந்திரன் தான் சாபத்தை நீக்க சிவன் விஷ்ணு பிரம்மா மூவரையும் ஒரே மூர்த்தமாக இங்கு வைத்து வணங்கியதாகவும் அதன்பின் அவன் சாபம் நீங்கியதாகவும் ஐதீகம் ! அதனாலேயே ஸ்தாணுமாலயன் என்பது மூலவரின் பெயர் !ஸ்தாணு என்றால் சிவன் .மால் என்றால் விஷ்ணு .அயன் என்றால் பிரம்மன்! ஆனால் மூலவர் சிவலிங்கம் தான் !அந்த லிங்கம் மும்மூர்த்தியாக வழிபடப்படுகிறது
                           






ராமேஸ்வரத்திற்கு அடுத்தபடியாக பிரமாண்ட பிரகாரம் அமைந்த தலம்
இது! தூண்களில் சிற்ப வேலைப்பாடுகளும் விளக்கேந்திய சிலைகளும் சிற்பக்கலையின் நுணுக்கத்தை பறை சாற்றுவதாக உள்ளன !




சுசீந்திரம்  என்ற உடன் நினைவுக்கு வருபவர் ஸ்ரீஆஞ்சநேயர்தான் ! மும்மூர்த்திகளும் ஒருங்கே இருந்து அருள் பாலிக்கும் தலம் என்றாலும் சுசீந்திரம் என்றதும் உடன் நினைவுக்கு வருபவர் ஸ்ரீ ஆஞ்சநேயர்தான் !வடக்கு   பிரகாரத்தில் உள்ள ஸ்ரீராம பிரான்  சன்னதிக்கு அருகில் கூப்பிய கரங்களுடன் சுமார் 18 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார் ! இவருக்கு விஷ்வ ரூப ஆஞ்சநேயர்  என்று திருநாமம் !கேட்ட வரங்களை அள்ளித்தருகிற வரப்பிரசாதி இவர் !

அன்னியர்கள் படை எடுப்பின் போது பிரமாண்டனதாக திகழும் 
ஸ்ரீஆஞ்சநேயரின் திரு விக்கிரக மூர்த்தத்தை எங்கே சிதைத்து விடுவார்களோ என பயந்து பூமியில் புதைத்து வைத்தனராம் !காலங்கள் 
உருண்டோடின ! இன்றைக்கு 85 வருடங்களுக்கு முன்பு இந்த விஷயத்தை அறிந்த அடுத்த தலைமுறையினர் ஓன்று சேர்ந்து புதைத்த இடத்தில் இருந்து ஸ்ரீஆஞ்சநேயரை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து வழி பட துவங்கினர் என்கின்றனர் வெண்ணெய் காப்பு செய்வது இங்கு விஷேசம் !
பின்னாளில் எத்தனையோ ஊர்களில் மிகப் பெரிய அளவில் ஸ்ரீ ஆஞ்சநேரின்  விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்திருந்தாலும்  புராதனமான ஸ்ரீஅனுமன் விக்கிரகம் என்றால்  அது சுசீந்திரம் ஸ்ரீ விஷ்வ ரூப ஆஞ்சநேயர் என்கின்றனர் வரலாற்று  ஆய்வாளர்கள் !
அனுமனை கர்நாடகத்தில் ஹனு மந்தையா என்றும் ஆந்திராவில் ஆஞ்சநேயலு என்றும் மகாராஷ்டிராவில்  மாருதி என்றும் சில மாநிலங்களில் மகாவீர் என்றும் அழைக்கின்றனர் !
சுசீந்திரம் கன்னியா குமரியில் இருந்து 11  கி.மீ. தூரத்திலும் ,நாகர்கோவிலில் இருந்து 7  கி.மீ. தூரத்திலும் ,திருநெல்வேலியில் இருந்து 70  கி.மீ.தூரத்திலும் உள்ளது !




Friday, 3 July 2015

நவீன நாரதர்

                                                நீங்களும் ஜாக்கிரதையாக  இருங்கள் !  

எனது நண்பர்  ஒருவர் வருவாய் துறையில் பணி புரிந்து வருகிறார் !அவருக்கு சில  ஆண்டுகளுக்கு ஒருமுறை வேறு  ஊர்களுக்கு  மாறுதலாகி செல்ல வேண்டும் !மிகவும் எளிமையானவர் ! அது அவர் தலை விதி !ஆனால் அவர் மனைவிக்கு என்ன தலை எழுத்தா ? ஊர் ஊராக செல்ல வேண்டும் என்று ! அதோடு ஆடம்பரப் பிரியை வேறு  ! கணவனை பற்றி  கவலைப் படமாட்டாள் ! அவர் வேலை பார்க்கிறார்!அதனால் பல ஊர்களுக்கு செல்ல வேண்டியது அவசியம் .தான் என்ன வேலையா பார்க்கிறோம்!தான் எதற்காக ஊர் ஊராக செல்ல வேண்டும் என்பது அவள் எண்ணம் ! அதுவும் சரிதானே ! அதிகாரிகலாவது இவளிடம் கேட்டு அவரை மாற்ற வேண்டும் ! அதுவும் இல்லை !பின் இவள் என்ன செய்வாள் ! அதனால் அவர் செல்லும் ஊருக்கு   இவள் செல்ல மாட்டாள் !இமய மலையே சிறிது நகர்ந்தாலும் நகரும் !இவள்  திருநெல்வேலியை விட்டு நகர மாட்டாள் !அவர்தான் சவுகரியப்படும்போது  வர வேண்டும் .எப்போதும் ஓட்டல் சாப்பாடுதான் ! குழந்தையும் இல்லை !.
 தினசரி சமைக்க வேண்டும் என்று கண்டு பிடித்தவனை  அவன் கழுத்தை
 பிடித்து திருக வேண்டும் என்று தேடிக்கொண்டிருப்பவள் !பிரிட்ஜை கண்டு பிடித்தவன்தான் அவளுக்கு குல தெய்வம் !ஒரு நாளைக்கு சமைத்து மூன்று நாளைக்கு  வைத்துக்கொள்வாள் ! நண்பருக்கு ஓட்டல் சாப்பாடு ஒத்துக்கொள்ளவில்லை ! சுகரிலிருந்து எல்லா வியாதியும் அவர் உடம்பில் வாடகை கொடுக்காமல் நிரந்தரமாக  தங்க ஆரம்பித்தது !
!
                                                



      
\அவள்  கணவனை கவனிக்கிறாள் அல்லது கவனிக்காமல் போகிறாள்!அதை பற்றி கவலை இல்லை !ஆனால் உறவினர் வீடுகளில் வந்து கலகமூட்டினால் 
   கவலை வரத்தானே செய்யும் .பத்து ஏழரையும்  சரி அவள் ஒரு ஆளும் சரி !கலகமூட்டுவதே தெரியாத படி பேசி குடும்பத்தை குலைத்து விடுவாள் !
எப்படி என்கிறீர்களா? உங்கள் வீட்டுக்கு வருகிறாள் என்று வைத்துக்கொள்ளுங்எப்கள் ! உங்கள் மகன் காலேஜில் படிக்கிறான் அல்லது பெரிய பையனாக இருக்கிறான் ! நீங்கள் இருக்கும்போதே அவனிடம் பேசுவாள்  ! பையன் எப்படி வளர்ந்துட்டான் ! சினிமா ஸ்டார் மாதிரி இருக்கனே ! சூர்யா மாதிரி இருக்கானே !விஜய்  மாதிரி இருக்கானே ! இவனை பெண்கள் கொத்திக்கொண்டு போய் விடுவார்களே ! யாராவது பெண்கள் உன்னை காதலிச்சு இருக்காங்களா ? காதலிச்சி இருப்பாங்க ! நீ என்ன செய்வ !நல்ல பையன் !ஆனா மன்மதன் மாதிரி இருக்கியே ! கடவுள்  அப்படி படைச்சுட்டாரே  ! நீ சும்மா இருந்தாலும் பெண்கள் உன்னை விட மாட்டார்களே ! என்னமோ அப்பா ஜாக்கிரதையா இரு என்று இவனை உசத்தி
 பேசுவது போல் பேசி   விட்டு போய் விடுவாள் !  அது வரை நல்ல பையனாக  இருந்தவனை  இவள் பேச்சு ஒரு வழி பண்ணி விடும் ! உண்மையிலேயே  நாம் சினிமா ஸ்டார் மாதிரித்தான் இருக்கிறோமோ ! நாம் தான் இதுவரை தெரியாமல் இருந்து விட்டோமோ ? பெண்கள் நம்மை காதலித்திருப்பார்களோ  நாம் தான் கண்டுக்காமல் இருந்து விட்டோமோ ? என்று அவன் மனம் அலை பாயும் ! படிப்பில் கவனம் குறையும் !நீங்கள் இதை கவனிக்காமல் விட்டு விட்டீர்கள் என்றால் ஒரு நாள் ஒரு பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடியும் போய் விடுவான் ! அதன் பிறகு அவன் வாழ்க்கை அதோ கதிதான் !ஏன் உங்கள் குடும்பமும் அதோ கதிதானே !
இதே போல பெண்கள் இருக்கிறார்கள் என்று வைத்துகொள்ளுங்கள்!அவளிடமும் இதே போல நீ ஐஸ்வர்யாராய்   போல இருக்கிறாய் அனுஷ்கா போல இருக்கிறாய் என்று கூறி அவள் மனதையும் கெடுத்து விஷ விதையை விதைத்து விடுவாள் !  
வளர்ந்த பிள்ளைகள் இல்லை என்றால் அவளுக்கு கவலை இல்லை .கணவன் மனைவி இருக்கும் வீடாக பார்த்து போய் பேசுவாள்! .என்ன வீட்டில் வேலைகள் முடிந்து விட்டதா ! அவர் ஆபிசுக்கு போய் விட்டாரா ! நீயும் லட்சனமாக இருக்கிறாய் அவரும் லட்சணமாக இருக்கிறார் .அதில தான் சிக்கலே இருக்கு !அவர் ஆபிசுலே பத்து பதினைந்து பெண்கள் வேலை பார்கிறார்கள் !இவர் சும்மா இருந்தாலும் அவர்கள் சும்மா இருக்கணுமே !  நீ ஜாக்கிரதையா இருக்கணும் ! அவர் யார் கூடவாவது பழக்கம் வச்சு இருக்காரானு விசாரிக்கணும் !சும்மா ஜடம் மாதிரி இருந்தேனா  பின்னால் உன் வாழ்க்கை மோசம் போயிடும் ! தும்பை விட்டுட்டு வாலை பிடுச்ச   கதையா  போயிறக்கூடாது ! என்று விஷ விதையை விதைத்து விடுவாள் .அது நன்றாக வேலை செய்யும் !அவன் ஆபிசில் இருந்து தற்செயலாக  லேட்டா வருவான் !இவள் ஏன் இவ்வளவு லேட்டு எவ கூட போய்ட்டு வா்றீங்க என்பாள் அது படிப்படியாக வளர்ந்து சண்டையாகி பேச்சு வார்த்தை நின்னு பிரிவினை வரை கொண்டு வந்து விடும் ! இதில் நமது கதாநாயகிக்கு என்ன லாபம் என்கிறீர்களா ! அவளுக்கு அது டைம் பாஸ் !அடுத்தவர்கள் சந்தோசமாக இருக்க கூடாது என்பதுதான் அவளது உயர்ந்த லட்சியம்!
உங்கள் வீட்டுக்கு அவள் வந்தாலும் வரலாம் !ஜாக்கிரதையாக இருங்கள் !.