முடியின் மகத்துவம்
முடி ஆட்சி முடிந்து பல நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் புராணகாலத்திலும் சரி, இன்றைய காலத்திலும் சரி, முடி தன்னுடைய ஆட்சியை செவ்வனே நடத்திகொண்டு தான் இருக்கிறது. "எப்படி?" என்று தானே கேட்குறீர்கள்?!
எனக்கு வயது அறுபது ஆகிறது. என்னை பார்பவர்கள் எப்பொழுதும் "அண்ணாச்சி...சௌக்கியமா?"என்பார்கள். ஒரு சமயம் கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த தாடி வளர்த்தேன். அப்போது என்னை "தாத்தா... சௌக்கியமா?"
என்றார்கள். அதே உடம்பு அதே கால், கைகள் தான். ஆனால் "அண்ணாச்சி " என்று அழைத்தவர்களை "தாத்தா" என்று அழைக்கவைத்தது எது?.. அந்த முடியே அல்லவா?!... அப்படி என்னை பழி வாங்கிய முடியை நான் மட்டும் விட்டு வைக்கலாமா... என்ன? அதன் மகத்துவம் என்னை மலைக்கவைத்தது . "அண்ணாச்சியை" விட்டு விட மனம் இல்லாமல் என்னை தினந்தோறும் ஷேவ் செய்ய வைத்து விட்டது .
"முடியை பற்றி சொல்லாமல் விட்டது, ஒருவருமே இல்லை" என்று சொல்லலாம்...வள்ளுவரே முடியை பற்றி கூறியிருப்பதை பாருங்களேன்...
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின் ...
என்கிறார்...
மொட்டை அடித்தலும் வேண்டாம், தாடி வளர்க்கவும் வேண்டாம்...தீய செயலை விட்டாலே போதும் என்கிறார். அவரே மயிருக்கும் மானத்திற்கும் ஒப்பிடுகிறார்
மயிர் நீப்பின் வாளாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்...
வள்ளுவரே முடியின் மகிமையை பற்றி இரண்டு குறள்களில் எடுத்து கூறுகிறார் என்றால் அதன் மகிமையை என்னவென்று கூறுவது...
சிவபெருமான் மட்டும் என்ன ? முடியை விட்டா வைத்தார் ?! பகிரதன் தவத்தால் வந்த கங்கை நேரடியாக பாய்ந்தால் பூமி தாங்காது ...என்று சிவன் தன்னுடைய ஜடா முடியில் தங்கவைத்து அதன் பின் வழிந்தோட செய்தார் . அவர் ஜடா முடி மட்டும் இல்லா விட்டால் உலகம் என்னவாகியிருக்கும்?!
அதோடு மட்டுமா? தருமி என்ற ஏழை அந்தணனுக்கு பொற்காசுகள் கிடைக்கவும் , நக்கீரனது தமிழ் பற்றை உலகுக்கு உணர்த்தவும் பாண்டிய மன்னனுடைய மனைவியின் கூந்தலை பயன்படுத்தி கொண்டார். "பாண்டிய மன்னன் மனைவியின் கூந்தலுக்கு வாசம் உண்டு" என்று பாட்டு எழுதிக்கொடுத்து, நாடகம் ஒன்றை நடத்தினார்..அதற்கும் பயன்பட்டது தலை முடி தானே?!
சிவனை விடுங்கள்.. இதிகாசங்களிலும் முடி தனது பிரதாபத்தை விட்டா வைத்தது ?! மகாபாரதத்தில் பாஞ்சாலியை எடுத்துகொல்லுவோம்... '"தன் தொடையில் அமரவேண்டும்"என்று சொன்ன துரியோதனனின் தொடையை வெட்டி அந்த ரத்தத்தை எடுத்து பூசிய பின் தான் தன் கூந்தலை முடிப்பேன்..' என்று சபதம் போட்டாள். அதை நிறைவேற்ற பஞ்ச பாண்டவர்களுக்கு அல்லும் பகலும் நினைவூட்டி வெறியை ஊட்டியது அந்த விரித்த கூந்தல் தானே? இன்றைய நவ நாகரீக மங்கையரின் விரித்த கூந்தல் பேஷனுக்கு முன்னோடி பாஞ்சாலி விரித்த கூந்தல் அல்லவா?
இராமாயணத்தில் மட்டும் என்ன? முடியின் பங்கு குறைந்தா போய் விட்டது?.. பல ஆயிரம் ஆண்டுகள் ஆண்ட தசரதன் ஒரு நாள் தன் காதோரத்தில் முடி ஒன்று நரைத்திருப்பதை பார்த்து விட்டு தானே தனக்கு வயதாகி விட்டது...ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும்...என்று எண்ணினார்...அதன் விளைவாக தானே கைகேயினால் ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு செல்ல... அவனோடு சீதா தேவியும் செல்ல... இராவணன் அவளை கவர்ந்து செல்ல...ராமன் , இராவணன் யுத்தம் ஏற்பட்டு இராவணன் அழிய... ஆக ராம அவதாரம் எடுத்ததின் நோக்கம் நிறைவேற அடித்தளம் அமைத்து கொடுத்தது இந்த முடி தளம் தானே?
முடியை பராமரிப்பதால் நேரம் வீணாகிறது என்று ஈ.வே.ரா.பெரியார் தாடி வளர்த்தார். சோ மொட்டை அடித்து வருகிறார். வள்ளுவர் சொல்லையும் மீறி ஒருவரை மீட்டவும் ஒருவரை மழிக்கவும் வைத்துவிட்டது அல்லவா முடி?
பாலிவுட் கதாநாயகர்கள் மீசை இல்லாமல் நடிக்கிரார்கள்... கோலிவுட்டில் மீசை இல்லாமல் நடித்தால் எடு படுவதில்லை... நம் தமிழ் சினிமாக்களில் இரட்டை வேடத்தில் வித்தியாசத்தை காட்ட பயன்படுவது இந்த மேசை ஒன்று மட்டுமே... இந்த மீசையை மையமாக வைத்து "தில்லு முல்லு" என்ற முழு நீல நகைச்சுவை படமே வந்து சக்கை போடு போட்டது ... ஞாபகம் இருக்கலாம்...
நம் பெண்களில் சிலர் மீசை உள்ளவனையே கணவனாக அடைய விரும்புகின்றனர்... சிலர் மீசை இல்லாத வழு வழு முகத்தையே விரும்புகின்றனர்... அனால் ஆண்கள் எல்லோருமே நீண்ட கூந்தல் உடைய பெண்களையே விரும்புகின்றனர்... அதனால் தான் கண்ணதாசனும் கார்குழலை ஏன் படைத்தாய் கன்னி இளமானே காளையரை கட்டுதற்கோ கன்னி இளமானே என்று தன் பங்குக்கு கூந்தலைப் பற்றி பாடி வைத்தார்.
என் நண்பன் ஒருவன்ஆபீஸ் விட்டு வரும்போது காற்றிலே பறந்த நீளமான முடி ஓன்று அவன் சட்டையிலே அடைக்கலம் புகுந்ததை அவன் அறியவில்லை .காபி டிபனை சிரித்த முகத்தோடு எடுத்து வந்த அவன் மனைவியின் கண்ணில் அந்த அடைக்கல முடி தென் பட்டு இவள் படைக்கலம் எடுக்கும் படியாகி விட்டது. இப்போது நீளமான முடியை பார்த்தாலே போதும் காத தூரம் ஓடுகிறான் .
பெரிய கனரக வகனங்களையே தன் தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை படைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பெங்களூரை சேர்ந்த ஒருவர் பல வருடங்களுக்கு முன்பு 54 வயதில் தன் மீசையின் இரு பக்கங்களிலும் தலா 17.5 கிலோ எடை உள்ள காலி சிலிண்டர்களை சாதனை படைத்துள்ளார்.
என் நண்பனின் மனைவிக்கு நீளமான தலைமுடி அவள் இரயிலில் பயணம் செய்யும் போது, தலைப்பின்னலை சீட்டுக்கு வெளியே தொங்க விட்டவாறு தூங்கிவிட்டாள். கண் விழித்தபோது அவள் தலை பாப் செய்யப்பட்டிருந்தது. அவள் தலை பாரத்தை குறைக்கவும் அவள் தலை முடியை சவரி முடி செய்து தன் வருவாயை பெருக்கவும் நினைத்த எவனோ அதை கட் பண்ணிக்கொண்டு போய்விட்டான். திரும்ப முடி வளரும் வரை அவள் அஞ்சாத வாசம் செய்தது தனிக்கதை. அந்த அதிர்ச்சியிலிருந்து இப்பொது வீட்டில் கூட முக்காடு போட்டு கொண்டு தான் தூங்குகிறாள்.
நம் வீட்டு பெண்கள் தலைமுடிக்கு தான் எத்தனை தைலங்கள் எத்தனை வாசனை திரவியங்கள்!! டிவியில் பாதி விளம்பரம் அதை பற்றி தானே இருக்கிறது. நமது வருமானத்தில் பாதி அதற்கு தானே செலவாகிறது.
ஆனால் பழங்குடியினரின் ஒரு பகுதியினர் தங்கள் தலை முடியை அழகு படுத்துவதாக எண்ணி ஆலமரத்தின் பாலை எடுத்து முடியில் தடவி சடையாக ஆக்கிக்கொள்கிறார்கள்.நமது சாமியார்களில் பலரும் தங்கள் தலையை சடையாக்க அதே வழியை பின்பற்றுகின்றனர்.
இந்த முடி நமக்கு செய்கிற உதவியை மறக்கமுடியுமா? நேர்த்திக்கடன் செலுத்தவேண்டும் என்றல் முடியை தானே காணிக்கையாக செலுத்துகிறோம்?என் கை,கால் போன்ற எதாவது உறுப்பை காணிக்கையாக செலுத்துவதில்லை...ஏனென்றால் அவைகள் திரும்ப முளைக்காதது மட்டுமல்ல உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும்...அதனால் வெட்ட வெட்ட வளரும் முடியையே எளிதாக காணிக்கை செலுத்துகிறோம்...காணிக்கையாக கோவிலுக்கும் வருமானத்தை தேடி தந்து நமக்கும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் தருகிறது முடி...
இவ்வளவு சிறப்பு வாய்ந்த முடியை நெருப்பை தவிர வேறு எதனாலும் அளிக்க முடியாது...அமிலத்தில் கூட கரையாது...