Friday, 29 December 2017

திருவிளக்கு பூஜை.

சுரண்டை ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் கோவிலில் 3008 திருவிளக்கு பூஜை!
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
சுரண்டை அருள்மிகு அழகு பார்வதி அம்மன் கோவிலில் நேற்று (29-12-17) மாலை திருவிளக்கு பூஜை நடை பெற்றது.அந்த கண் கொள்ளா காட்சியை பார்க்க கோடி கண்கள் வேண்டும். 3008 பேர்கள் விளக்கு பூஜை என்று கூறி இருந்த போதிலும் 5000 பெண்களுக்கு மேல் வந்திருந்தனர்.வானத்து நட்சத்திர கூட்டமே அழகு பார்வதி அம்மன் கோவிலுக்கு வந்து விட்டதை போல எங்கு பார்த்தாலும் பெண்கள் கூட்டமே!
இந்திரன் மயனை அனுப்பி பந்தல் அமைத்திருப்பார் போலும்.தமிழகமே திரண்டு வந்தாலும் அமரக் கூடிய அளவு அவ்வளவு பெரிய பந்தல் .அதில்நிகழ்ச்சி நிறைவு பெற்று செல்லும் போது நெருக்கடி ஏற்படாமல் இருக்க  நான்கு புறமும்  அகன்ற வாசல்.
மாலை 5-30 மணிக்கு நாதஸ்வர இசையுடன் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.
அதன் பின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடை பெற்றது.
முகப்பு வாசலில் திருவிளக்கு பூஜை கமிட்டி துணைத்தலைவர் உ. சுப்பு மாணிக்க வாசகம் அவர்கள் தலைமையில் உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்று பொன்னாடை அணிவித்து அமரச்செய்தனர்.
அவ்வளவு பெரிய பந்தலையும் கடந்து கோவிலுக்குள்ளும் இடம் போறாது என்று அருகில் உள்ள திருமண மண்டபத்திலும் பெண்கள் திரு விளக்குடன் வந்து நிறைந்து அமர்ந்து திருவிளக்கு பூஜை செய்தனர்.கமிட்டி செயலாளர் P.ஆறுமுகச்சாமி வந்திருந்தவர்களை வரவேற்று,பெண்கள் அனைவரையும் திரு விளக்கு பூஜையிம் மனம் ஒருமுகப் படுத்தும் விதமாக பேசினார்.
சிறிது நேரத்தில் திருக்குற்றாலம் ஐந்தருவி ஸ்ரீ சுவாமி விவேகானந்த ஆஸ்ரமம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அகிலானந்தஜீ அவர்கள் தலைமையில் மற்றும் இரு சந்நிதிகளும் வந்தனர். அவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதை செய்யப்பட்டது.அவர்கள் அம்மனை வணங்கி விட்டு மேடைக்கு வந்தனர். பாளை அய்யப்பா டிரான்ன்ஸ் போர்ட் அதிபர் புளியரை S.ராஜா,  மூத்த குடி மக்கள் திருநெல்வேலி மாவட்ட செயலாளர்எஸ். கணபதியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு ஆதீனங்களுக்கு பழங்கள்,மாலைகள் அளித்து மரியாதை செய்தனர்.
கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகளான ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ முருகன்.ஸ்ரீ அழகு பார்வதி அம்மன் ஆகிய தெய்வங்களை மேடையில் எழுந்தருளி செய்தனர்.
பூஜைகள் முடிந்து ,ஆதீனங்கள் ஆசிகள் வழங்கியவுடன் பெண்கள்  அனைவரும்  ஆகம விதிகள் படியும் சாஸ்திர சம்பிரதாயங்கள் படியும் திரு விளக்கு ஏற்றி ஸ்துதிகள் கூறி பூஜைகள் செய்தனர்.முப்பத்து முக்கோடி தேவர்களும் நிச்சயம் வானில் இருந்து பார்த்து மகிழ்ந்து ஆசி கூறி இருப்பர்.
இத்துணை ஏற்பாடுகளையும்  மிகச் சிறப்பாக செய்த கமிட்டி தலைவர் S. செல்லத்துரை,துணைத்தலைவர் U. சுப்பு மாணிக்கவாசகம்,செயலாளர் P. ஆறுமுகச்சாமி மற்றும் உறுப்பினர்கள் அனைவரைக்கும்  பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்!!

Wednesday, 27 December 2017

தெய்வ சிந்தனை.!

மார்கழி திங்கள்!
,,*******************
மார்கழி மாதம்  முழுவதும் அதி காலையில் எழுந்து நீராடி பஜனை பாடி வருவது நமது பெரியோர்கள் நமது உடலுக்கும், உள்ளத்திற்கும் நலனைத்தரும் நன் நெறிகளாகும். அதனை  ஒவ்வொரு ஊரிலும் கடை பிடித்து பஜனை பாடி வருகிறார்கள்!
பாளையங்கோட்டையில்ஸ்ரீ ராஜ கோபால சுவாமி  கோயிலை சுற்றி இளைஞர்கள் ஒன்று கூடி பஜனை பாடி வருவது பார்க்க பரவசமாக இருக்கிறது.பல ஆண்டுகளாக  பஜனை செய்து வருகிறார்கள் .என்றும் அவர்களது ஆன்மீக பணி. தொடரட்டும்.

மனிதர்களில் எத்தனை வகை

நாகரீகம்!
************
எனது நண்பரின் மகனுக்கு பெண் பார்க்க நானும் உடன் சென்றேன்.
நாங்கள் பெண்ணின் தகப்பனாருடன் பேசிக் கொண்டிருந்தோம்.சிறிது நேரத்தில் பெண்ணின் தாயார் இரு தம்ள ர்களில் காபி கொண்டு வந்தார்.
எனது நண்பன் காபி குடிக்கும் வழக்கமில்லை என்று கூறி விட்டான்.அந்த அம்மாவிற்கு முகம் ஒரு மாதிரி ஆகி விட்டது.
நானும் காலையில் ஒரு நேரம் ,மாலை ஒரு நேரம் மட்டுமே காபி குடிப்பேன் இடையில் காபி குடிக்க மாட்டேன்.அதுவும் சீனி சேர்க்க மாட்டேன். இந்த நிலையில் நானும் காபி வேண்டாம் என்றால் அந்த அம்மா மனம்  மிகவும் வேதனைப் படும்.அதோடு பெண்ணின் அப்பாவும் அந்த அம்மாவை ஏன் அவர்களை கேட்காமல் காபி போட்டாய் என்று கண்டிப்பார்.
இதனை எல்லாம் யோசித்து நான் காபியை வாங்கி குடித்து விட்டேன்.இனிப்பு கூடுதலாக இருந்தது. அதை வெளிக் காட்டவில்லை.
இருவரும் விடை பெற்று வெளியே வந்தோம்! இந்த மாதிரி நேரங்களில் நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் இந்த அம்மா இருவரிடமும் காபி சாப்பிடுவீர்களா, கொண்டு வரட்டுமா ,என்றும் சீனி சேர்க்கலாமா என்றும் கேட்டிருக்க வேண்டும். அந்த அம்மா ஏதோ மரியாதைக்கு கொண்டு வந்து விட்டது.
நண்பனாவது காபி குடிக்க மாட்டான் என்றாலும் கூட மரியாதைக்காகவாவது அரை தம்ளராவது வாங்கி குடித்திருக்கலாம்.
கடைசியில் நாகரீகம் கருதி சீனி போட்ட காபியை வாங்கி நான் குடித்து விட்டு வீட்டில் வந்து சுகர் மாத்திரையும் ஜெலிசுலும் சாப்பிட்டேன்.

Tuesday, 12 December 2017

தேவையான உதவி!

துணைவன்(வி)!
,*************,**********
அந்தக் காலத்தில் மாப்பிள்ளயை விட பெண்ணுக்கு ஐந்து அல்லது ஆறு வயது குறைவாக உள்ள பெண்ணையே பேசி முடிப்பார்கள்.காரணம் ஆண்களுக்கு வயதாகி முதுமை அடையும் போது பெண்களுக்கு குறைவான வயதாக இருந்தால்தான் ஆண்களுக்கு உதவியாக இருக்க முடியும்.உறு துணையாக இருக்க முடியும் என்ற முன் யோசனையால்தான்.அது காலப்போக்கில் ஒன்று அல்லது இரண்டு வயது வித்தியாசம் ஆகி இப்போது சம வயதிலேயே திருமணம் செய்கிறார்கள்
ஆனால் எத்தனை வயது வித்தியாசம் இருந்தாலும் பெண்கள் சீக்கிரமே முதுமை அடைந்து விடுகிறார்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் பத்து பிள்ளைகள் இருப்பார்கள்.  பத்தாவது ஆணாக இருந்தால் பரமசிவன் என்றும் பெண்ணாக இருந்தால் பார்வதி என்றும் பெயரிட்டு முற்று புள்ளி வைப்பார்கள்.ஆனால்  எத்தனை பிள்ளைகள் பெற்றாலும் பெண்கள் திடகாத்திரமாவும்,உடல் உறுதியுடனும் ,சுறுசுறுப்புடனும்  இருந்தார்கள். அதற்கு காரணம் அவர்கள் அம்மி அரைத்தார்கள்,தோசைமாவு ஆட்டினார்கள்,உரலில் பொடிகள் இடித்தார்கள் ,தண்ணீர் குடம் சுமந்தார்கள்,வீடு பெருக்கி கோலம் இட்டார்கள்.இப்படி உடல் உழைப்பு இருந்ததினால் பிரசவம் எளிதாக இருந்தது.
இப்போது மிக்சி, கிரைண்டர்,வாசிங் மெசின், இவைகள் எல்லாம் வந்து உடல் உழைப்பை கெடுத்து விட்டது. வீடு பெருக்குவதற்கு கூட குனியாமல் பெருக்குவதற்கு நீளமான கம்பு உள்ள துடைப்பம் உள்ளது.
ஆக முதல் குழந்தைக்கே சிசேரியன் ஆபரேசன் செய்ய வேண்டிய நிலை பெண்களுக்கு வந்து விட்டது.அது பெண்களை மிகவும் பலவீனமாக்கி விடுகிறது. அதற்கு மாத்திரை மருந்து என்று சாப்பிட்டு முதுமையை விரைவில் வர வழைத்து விடுகிறது.ஆண்களை விட பெண்கள் சீக்கிரம் முதுமை அடைந்து விடுகிறார்கள். கடைசியில் ஆண்களுக்கு பெண்கள் உதவியாக இருக்க வேண்டிய நிலைமாறி பெண்களுக்கு ஆண்கள் உதவி செய்ய  வேண்டிய நிலை வந்து விட்டது.
இது கால மாற்றத்தால் வந்த செயல்.

Wednesday, 6 December 2017

மனிதர்களில் எத்தனை வகைகள்!

வாழ்க்கையா? வருமானமா?

எனது நண்பனின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்க நானும் உடன் சென்றேன். அவர் கோயம்புத்தூரில் வேலை பார்த்து வந்தார். அவரின் மேலதிகாரி எனக்கு தெரிந்தவர். அவர் எங்களை வரவேற்று மாப்பிள்ளை நல்ல பையன். கெட்ட பழக்கம் எதுவும் கிடையாது. அதனால் பேசி முடித்து விடுங்கள் என்றார். அதே போல் மாப்பிள்ளையிடமும் ,வந்திருப்பது நல்ல குடும்பம். எனக்கு நன்கு தெரிந்தவரின் நண்பனின் தங்கை. எனவே இதை முடித்து விடுங்கள் என்று கூறி இருக்கிறார்.
ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போடுவது மாப்பிள்ளையின்  சித்தி என்பதை அறிந்து கொண்டேன். மாப்பிள்ளைக்கு அப்பா,அம்மா இல்லை. சித்தியின் பராமரிப்பில் இருக்கிறார். இவருக்கு திருமனம் ஆகி விட்டால் தனக்கு செலவுக்கு தரமாட்டான் என்று எண்ணி திருமணத்தை தள்ளி போட்டு வந்திருக்கிறார்.
நான் மாப்பிள்ளையை தனியே அழைத்துச் சென்று பேசினேன்.தம்பி! உங்களுக்கு இப்போதே வயது முப்பது ஆகி விட்டது.ஓய்வு பெற  இன்னும் 28 வருஷம் தான் இருக்கிறது. இப்போது திருமணமாகி அதுவும் பெண் குழந்தை பிறந்தால் அதை வளர்த்து ஆளாக்கி அதை கட்டி கொடுப்பதற்கும் நீங்கள் ரிட்டயர்டு ஆவதற்கும் சரியாக இருக்கும்.உங்கள் பிற்காலத்திற்கும் சேர்த்து வைக்க வேண்டும். அதனால் தான் காலத்தே பயிர் செய் என்று பெரியோர்கள்  சொல்லி இருக்கிறார்கள்.பிற் காலத்தை பற்றி கணக்கிட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாவிட்டால் பின்னால் சங்கடப்பட நேரிடும். உங்கள் சித்தியை என் நண்பனின் தங்கை நன்றாக கவனித்துக் கொள்ளுவாள் .அதைப் பற்றி கவலைப் பட வேண்டாம் என்றேன். நான் சொன்னதின் நியாயங்கள் அனைத்தையும் புரிந்து கொண்டார்.
தன் சித்திக்கு இந்த இடத்தை உடனே பேசி முடிக்கமாறு கடிதம் எழுதி கொடுத்தார்.
திருமணமும் இனிதே முடிந்தது. சித்தியும் அவர்களுடன் சந்தோசமாக இருக்கிறாள். அவர் ரிட்டயர்டு ஆகு முன்பே அவர் மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.
ஆணோ,பெண்ணோ பிள்ளைகளின் சம்பளத்தை வைத்து காலம் கழிக்கும் பெற்றோர்களே அதற்காக அவர்களின் திருமணத்தை தள்ளி போடாதீர்கள்! அவர்கள் வாழ்க்கை வீணாகி விடும்.கடவுளை நம்புங்கள்.அவர் கை விடமாட்டார்.நல்லதை எண்ணினால் நல்லதே நடக்கும். இறைவனும் பிள்ளைகளும் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.இறைவனை நம்பினவர்கள் யாரும் கைவிடப் படுவதில்லை!
.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று.

கோயில் சொத்து!
👀👀👀👀👀👀👀
எனது உறவினர் ஒருவருக்கு தமிழ் நாட்டில் உள்ள பெரிய  கோயில் ஒன்றில்.  ஆனையராக பதவி வழங்கப்பட்டது. அது D.R.O. ரேங்கில் உள்ளது.மதிப்பு மிக்கது. பெரிய மனிதர்களின்  பழக்கம் கிடைக்கும்.அவர்கள் இவரைத் தேடி வருவார்கள்.ஆனால் அவர் அந்த பதவியை வேண்டாம் என்று கூறி விட்டார்.யாருக்கும் எளிதில் கிடைக்காத பதவி உங்களுக்கு கிடைத்திருக்கிறது.அதை வேண்டாம் என்று கூறுகிறீர்களே என்று குடும்பத்தில் உள்ளவர்கள்,உறவினர்கள்,நண்பர்கள் என்று எல்லோரும் வருத்தப் பட்டனர்.
அதற்கு அவர்  கோயில் சொத்து குடும்பத்திற்கு ஆகாது என்று கூறுவார்கள். கோயிலில் பெரிய பதவி. அதனால் கோயிலில் இருந்து பிரசாதம் முதல்  எல்லாமே வீட்டிற்கு வரும். அதுவே பழக்கமாகி விடும். நம் பணம் கோயிலுக்கு போக வேண்டுமே அன்றி கோயில் பணம் ஒரு பைசா கூட வீட்டிற்கு வரக்கூடாது.சண்டிகேஸ்வர்ர் என்று ஒவ்வொரு கோயிலிலும் எதற்கு இருக்கிறார் தெரியுமா.,,? கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவரிடம்  வந்து சுவாமியை வணங்கி விட்டு அவன் அருளைத் தவிற வேறு எதையும் நான் கொண்டு செல்லவில்லை என்று அவரிடம் கூறி விட்டுத்தான் வீட்டிற்கு வர வேண்டும். சாஸ்திரங்கள் இப்படி இருக்கையில் கோயில் பணத்தை நாம் விரும்பலாமா? அதனால்தான் மனம் ஒப்பவில்லை.அந்தப் பதவியை வேண்டாம் என்றேன்.என்று. கூறினார்.அவருக்கு எவ்வளவு உயர்ந்த உள்ளம்.

Monday, 4 December 2017

மனித மனங்கள்.

கட்டுப்பாடு!
👀👀👀👀👀
இந்த வார்த்தையில் பிரபஞ்சமே அடக்கம்.இது வெறும் வார்த்தை அல்ல. இது ஒரு மந்திரச் சொல்.வேத சாஸ்திரங்களில் எவ்வளவு அர்த்தம் இருக்கிறதோ,எவ்வளவு சக்தி இருக்கிறதோ அவ்வளவு அர்த்தமும்,சக்தியும் இந்த வார்த்தையிலும் இருக்கிறது.
உணவில் கட்டுப்பாடு,உடையில் கட்டுப்பாடு, நடத்தையில் கட்டுப்பாடு என்று நமக்கு நாமே கட்டுப்பாட்டை வகுத்துக் கொண்டால்,எல்லைக் கோட்டை அமைத்துக் கொண்டால் நாட்டில் காவல் நிலையமும் தேவை இல்லை. நீதிமன்றமும் தேவை இல்லை.
காஞ்சி பெரியவரின் காலத்தில் நடந்தவைகளை படிக்கும் போது பிரமிப்பாக இருக்கிறது.அவரால் எல்லாம் செய்ய முடியும். ஆனால் அவர் காமாட்சியை வணங்கு.திருப்பதியில் திருக்கல்யாணம் செய்து வை.என்று ஒவ்வொரு கோயிலுக்கும்  சென்று முறையிடச் சொல்லுகிறார்.  அவ்வாறு செய்ததும் அந்த காரியம் நடபெற்று விடுகிறது.தெய்வத்தின் பிரதிநிதியாக தான் இருந்தாலும் அந்த தெய்வம் மூலம் நடந்ததாக மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.அது தனக்கு விதித்த கட்டுப்பாடு.
கடல் நான்கு கரைகளுக்குள் அடங்கி இருப்பதும், நதி இரு கரைகளுக்குள் அடங்கி ஓடுவதும் யானை பாகனுக்கு அடங்கி நடப்பதும்,விலங்குகள் வனத்திலேயே இருப்பதும் எல்லாம் கட்டுப் பாடுகளே ! பூமித்தாய் தன் கட்டுப்பாட்டை இழந்தால் சுனாமி,புயல்,பூகம்பம்,எரிமலை வெடித்தல் எல்லாம் நடக்கிறது.
கட்டுப்பாட்டை மீறும் போது நிதானம் பிறழ்கிறது.உண்மை கசக்கிறது் பொய்மை இனிக்கிறது.நண்பன் விரோதி ஆகிறான். விரோதி நண்பனாக தெரிகிறான்.மானமும் மரியாதையும் காற்றில் பறக்கிறது. ஊழலும் லஞ்சமும் நியாமாக தெரிகிறது.
எனவே கட்டுப் பாடு என்ற தாரக மந்திரத்தை நமக்கு நாமே உச்சரிப்போம்.லட்சுமணன் கோடு என்ற எல்லைக் கோட்டை வகுத்து அதை தாண்டாமல் இருப்போம்.தர்மம் தழைக்கட்டும்.! தமிழகம் வாழட்டும்!!

Sunday, 3 December 2017

இயற்கை அதிசயம்.

கூப்பதநீர்!
▪▪▪▪▪▪
பதநீரை பானையில் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்சுவார்கள். நன்றாக வற்ற காய்ச்சினால் கறுப்பட்டி ஆகும். அதற்கு முன்பு கூழ் போன்ற நிலையில் இருக்கும். கூழ் போன்று இருப்பதால் கூழ் பதநீர் என்ற சொல்தான் கூப்பதநீர் ஆகி விட்டது.அப்படி கூழ் போன்று இருக்கும்போது  அதை பச்சை பனை ஓலையை பட்டை பிடித்து அதில் இந்த கூப்பதநீரை விட்டு அதில் தேங்காய்ப்பூ, பொரி கடலை,வறுத்த வேர்க்கடலை பருப்பு ,பாதாம் பருப்பு இவைகளை போட்டு ஓலை நறுக்கினால் நன்றாக விரவி அந்த ஓலை நறுக்கினால்  எடுத்து சாப்பிட்டால் தேனாமிர்தமாக இருக்கும்.அதன் சுவையே அலாதிதான்.இந்தக் கால இளைஞர்கள் இதுவரை சாப்பிடாவிட்டால் பதநீர் காய்ச்சும் இடத்தை கண்டு பிடித்து வாங்கி சாப்பிட்டு பாருங்கள்.!

Saturday, 2 December 2017

மாற்றுத் திறனாளிகள்!

இன்று மாற்றுத் திறனாளிகள் தினம்.
🔹🔹🔹🔹🔹🔹🔹
மாற்றுத் திறனாளிகளை நாம் மதித்து ஆக்கமும் ஊக்கமும் கொடுக்க வேண்டும்.ஒரு கதவு அடைத்தால் மறு கதவு திறக்கும் என்று சொல்வார்கள்.இது இயற்கையின் நியதி.அதுபோல் மாற்றுத் திறனாளிகளிடம் மிகுந்த ஆற்றலும் சக்தியும் ,திறமையும் கடவுள் கொடுத்திருக்கிறார். உதாரணத்திற்கு ஒலிம்பிக்கில் தங்கம் வென்று பாரதத்திற்கு பெருமை தேடித் தந்த மாரியப்பன் தங்கவேலுவைச் சொல்லலாம்.இப்படி எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள்.லயன்ஸ்,ரோட்டரி,மற்றும் சமூக ஆர்வல அமைப்புகள் இவர்களை கண்டறிந்து ஆதரிக்க வேண்டும். அதோடு மாற்றுத் திறனாளிகளை அரசாங்கமும்,மக்களும், அரசு அலுவலர்களும், மதித்து ஆதரிக்க வேண்டும்.

Friday, 1 December 2017

பெண்களின் மாண்பு!

பெண்களின் மாண்பு!
,********************
நண்பனின் வீட்டிற்கு இன்று சென்றிருந்தேன். அப்போது மழை பெய்ய தொடங்கியது. அந்த நேரத்தில் வயதான பெண்மணி ஒருவர் முருங்கைக் கீரை விற்றுக் கொண்டு அங்கு வந்தாள். ஒரு கட்டு ஏழு ரூபாய் சொன்னாள். நண்பனின் மனைவி ஐந்து ரூபாய்க்கு கேட்டாள்..  கீரைக்காரி ஏழு ரூபாய்க்கு குறையாது என்றாள்.நண்பனின் மனைவி மறுப்பேதும் சொல்லாமல் பதினான்கு ரூபாய்க்கு இரண்டு கட்டு வாங்கி பணத்தை கொடுத்தாள். .மழை குறையவில்லை.
மழை நிற்கட்டும். அதுவரை உட்காரு என்று சொல்லி விட்டு நண்பனின் மனைவி உள்ளே சென்றாள். வரும் போது அவள் தட்டு ஒன்றில் நான்கு இட்டிலிகளும் சட்னியும்  எடுத்து வந்து கீரைக்காரி யிடம் கொடுத்தாள்.  இது எதற்கு அம்மா என்றாள் கீரைக்காரி. காலையில் நீ சாப்பிட்டிருக்க மாட்டாய்.பரவாயில்லை.சாப்பிடு என்றாள்.
கீரைக்காரி சாப்பிட்டாள். அதற்குள் ஒரு தம்ளரில் சூடான காபி கொண்டு வந்து கொடுத்தாள். கூச்சப் பட்டாலும் காபியை.வாங்கி குடித்தாள்.
மழை நிற்க தொடங்கியது. கீரைக்காரி எழுந்தவள் இரண்டு முருங்கைக் காய்களை எடுத்து நண்பனுன் மனைவியிடம் கொடுத்து இதை வச்சுக்குங்கம்மா என்றாள்.கீரை வாங்கி விட்டேன் . முருங்பைக் காய்  வேண்டாம் என்றாள்.காசு வேண்டாம் அம்மா.நானாக தருகிறேன் என்றாள்..காசை பத்தி ஒண்ணும் இல்லை அம்மா.வேண்டும் எனில் நானே காசு கொடுத்து வாங்கிடுவேன். காய் இப்போது இருக்கிறது. அதனால் வேண்டாம் என்று கூறியவள் சரி நீ போய்வா என்றாள்..கீரைக்காரியிடம் சாப்பிட்டு விட்டு சும்மா போக்க்கூடாது என்ற எண்ணமும்,நண்பனின் மனைவியிடம் சாப்பாடு கொடுத்து விட்டு அதற்கு பிரதி பலனாக எதையும் பெற்று விடக் கூடாது என்ற எண்ணமும் மேலோங்கி நின்றது.
முதலில் கறாராக பேசிய கீரைக்காரி இப்போது இரண்டு காய்களை இலவசமாக கொடுக்க முன் வருகிறாள்.
நண்பனின் மனைவியோ முதலில் விலையை குறைத்து கேட்டாலும் அவள் நிலை அறிந்து அவள் சொன்ன விலைக்கே வாங்கியதுடன் உணவும் கொடுத்து உபசரிக்கிறாள்.இதை பார்த்து நானும்
நண்பனும் சிரித்துக் கொண்டோம்.
காலம் எவ்வளவு மாறினாலும் தமிழக பெண்களின் மாண்பு என்றும் மாறாது என்பதை தெரிந்து கொண்டோம்.
வாழ்க தாய்மார்கள்! வளர்க அவர்களின் மாண்பு!

கலைவாணர்!

கலைவாணரின் பிறந்த நாள்.
,********************கலைவாணரின் 110 வது பிறந்த நாளான இன்று அவரது நினைவை போற்றுவோம்.அவரது நகைச்சுவைகளில்  மக்களின் அறியாமையை போக்கும் வகையிலும்,உழைத்து பிழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் வகையிலும்,பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையிலும் இருக்கும்.அதனால்தான் அவருக்கு கலைவாணர் என்ற பட்டம் வழங்கப் பட்டது.அறிஞர் அண்ணாவுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். M.G.R. அவர்களால் பெரிதும் மதிக்கப் பட்டவர்.தொலை நோக்கு பார்வை கொண்ட தீர்க்க தரிசியாக திகழ்ந்தவர்.அவரால் உதவி பெறாதவர்கள் சினிமா உலகில் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.அவர் எழுதி நடத்திய கிந்தனார் சரித்திரம் நாடகம் என்றும் மறக்க இயலாது.