Monday, 31 August 2015

மாறாத பழக்கம்

இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்களுக்கு பழைய கதை ஏதும் ஞாபகத்திற்கு வருதா !வரலையா !சரி ! பரவாயில்லை ! நானே சொல்றேன் ! ஒரு முனிவர் 
 ஆற்றில்  நீராடச் சென்றார் ! அப்போது தன் கையில்  உள்ள கமண்டலத்தை  ஆற்று மணலில் வைத்து  அடையாளம் தெரிவதற்காக  மணலை குவித்து  மூடி வைத்து விட்டு குளிக்க சென்றார் ! முனிவர் குளித்து  விட்டு திரும்பி வந்து பார்த்தால் ஆற்று மணல்  பரப்பு முழுவதும் மணல் குவியலாக தெரிந்தது ! இவர் கமண்டலம் எது என்று கண்டு பிடிக்க முடியவில்லை ! காரணம் ஆற்றில் குளிக்க வந்த அனைவரும் தாம் கொண்டு வந்த பொருளை  மணலால் மூடி வைப்பதுதான்  ஐதீகம் என்று எண்ணி   எல்லோரும்  மணலால்  மூடி வைத்து விட்டு குளிக்க சென்றனர் ! ஒருவாறு முனிவர் தனது கமண்டலத்தை கண்டுபிடித்து எடுத்துக்கொண்டார் ! மனிதர்களின்  அறியாமையை ,மூட நம்பிக்கையை எண்ணி வருத்தமுற்றார் !
அந்த காலத்தில் இருந்தே நம்மிடம் ஒரு பழக்கம் இருந்து வருகிறது ! ஒருவர் பழக்கடை  வைத்து லாபம்  பார்த்தால் பல பேர் பழக்கடையாக  வைப்பார்கள் !
 சுவீட் ஸ்டால் வைத்து ஒருவர் நன்றாக ஓடினால் பலரும் சுவீட் ஸ்டாலாக வைப்பது வழக்கம் ! வேறு வியாபாரம் செய்து சம்பாதிப்பது என்ற எண்ணமே  வருவதில்லை !
  என் நண்பர் ஒருவர் ரொம்ப சுத்தம் பார்ப்பார் ! காபி கடைக்குப்  போனால் எல்லோரும் தம்ளரில் எச்சில் பண்ணி குடிக்கிறார்கள் என்று இவர் வட்டகையில் காபி குடிப்பார் ! ஒருநாள் இவர் வட்டகையில் காபி குடித்து விட்டு பார்த்தால் எல்லோருமே  வட்டகையில் காபி குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார் !இந்த ஜனங்களை மாற்றவே முடியாது என்று எண்ணி தலையில் அடித்துக் கொண்டார் !
                                                             
 உலகில் மாறாதது மாற்றம் ஓன்று மட்டுமே ! அதிலும் நம் ஜனங்கள் அடுத்தவர்களை பார்த்து காப்பி அடிக்கும் பழக்கம் என்றுமே  மாறாது !
                                                                                                                       
                       
                                                             

Friday, 14 August 2015

சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் !



 அந்த காலத்துல  எல்லா கிராமத்திலும் ஒரு கால் நடை பவுண்டு இருந்தது           அந்த கிராமத்திலும்  ஒரு  பவுண்டு இருந்தது ! அதுல ரொம்ப  நாளா ஆடு  மாடு அடைக்காததால  பவுண்டில புல்லு ஆளுயுரதிற்கு  வளர்ந்து நின்னுது ! இதை ஒருத்தன் பார்த்தான் ! அவனுக்கு தன் வீட்டுல  வளருத இருபது  ஆடுகளும் நினைவுக்கு  வந்தது !கூடவே  ஏழரையும் கூடவே சேர்ந்து  வந்தது !கிராம  அதிகாரிகிட்ட போயி ஐயா! பவுண்டில  புல்லு ஆளுயரத்திக்கு வளர்ந்து நிக்குது ! பூச்சி கட்ட அடைஞ்சிரக்கூடாது ! நான் என் ஆடுகள மேய விட்டுரதேன் !இடம்  சுத்தமாயிரும்ன்னான்!கிராம  அதிகாரியும்  பார்த்தாரு !சரி! இடமாவது  சுத்தமாகட்டும்னு சொல்லி சாவியை கொடுத்தாரு !மேச்சுட்டு உடனே சாவியை கொண்டுவரனும்னு சொன்னாரு !இன்னொன்னும் சொன்னாரு !அதான்  ரொம்ப  முக்கியம் !ஆட்டை மேய விட்டுட்டு எங்கேயும் போயிராேத ! அங்கேயே இருக்கணும்ன்னாரு!
                                         
                                             
        இவனுக்குதான்  ஏழரைை புடதியில  நின்னு ஆடுதானே ! இவன் என்ன செய்வான் ! இருபது ஆட்டையும் மேய விட்டுட்டு அங்கேயே நிக்காம  கதவ பூட்டிட்டு டீ குடிக்க போயிட்டான் ! அந்த  நேரம் பாக்கவா மேலதிகாரி வரணும் ? எந்த  ஊருக்கோ போயிட்டு வரும் பொது வர்ற வழியில இந்த பவுன்ட பார்த்தாரு ! உடனே  கிராம அதிகாரி ஆபிசுக்கு போய்  பவுண்டு கணக்கபார்த்தாரு !கணக்குல ஒன்னும்  பதியல ! இருபது  ஆட்டையும் பதிய சொன்னாரு ! கிராம  அதிகாரி விசயத்த சொல்லி பார்த்தாரு ! மேலதிகாரி கேக்கல !கிராம அதிகாரி கணக்குல  பதிஞ்சிட்டாரு!
                                                     


டீ குடிச்சிட்டு பவுண்டுக்கு வந்தவன் பதறி போயிட்டான் !காவலுக்கு ரெண்டு பேரு  நிக்காங்க!என்னையான்னு  விஷயத்தை கேட்டான் ! ஆபிசுக்கு கூட்டிட்டு போய்ட்டாங்க ! அங்க போய்தான் விஷயம் புரிஞ்சது !குய்யோ  முறையோனு முறையிட்டு  பார்த்தான் ! ஒன்னும்  நடக்கல !
  பவுண்டு கதவ பூட்டிட்டு டீ குடிக்க போனதால வந்த வினை ! ஒரு  ஆட்டை விலை  பேசி இருபது ஆட்டுக்குள்ள அபராதத்தை  கட்டிட்டு ஆடுகள  பத்திட்டு  போனான் !
காட்டுக்கு பத்திக்கிட்டு போயிருந்தா ஒரு  செலவும்  வந்திருக்காது ! பவுண்டுல மேய  விட்டுட்டு கதவ திறந்து வச்சு நின்னுருந்தா மேலதிகாரி விஷயத்தை கேட்டுட்டு போயிருப்பாரு !இப்ப  இத்துனூண்டு இடத்தில இருபது  ஆட்டை மேச்சுட்டு ஒரு  ஆட்டை பறி  கொடுத்ததுதான் மிச்சம் !  அதான் சொல்றது  சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி  முக்கால் பணம்னு
                                                 
!

Sunday, 9 August 2015

தாம்பூலம் தரித்தல்

  வெற்றிலை  போடுவது  ஒரு தனி  கலைங்க! அதை  தாம்பூலம் தரித்தல் என்றும் சொல்லுவாங்க  ! இரண்டிற்கும் என்ன வேறுபாடுனா ? சில வெற்றிலைகளை எடுத்து காம்புகளை கிள்ளி பாக்கும் சுண்ணாம்பும் வைத்து  வாயில் போட்டு அரைத்து தின்றால்அதை வெற்றிலை  போடுதல் என்று கூறலாம் !     அதையே கலை நயத்தோடு  இளம் தளிர் வெற்றிலைகளை  எடுத்து அதன்  காம்புகளைகிள்ளி போட்டு  நரம்புகளை நீக்கி வாசனை  சுண்ணாம்பு தடவி ,சிறிது  கொட்டை பாக்கு வைத்து அதனுடன்
சம அளவில் ஏலக்காய்,கிராம்பு ,வால்மிளகு ,சாதிக்காய்கொஞ்சம் தேங்காய் பூ  ,இவைகளை கலந்து நீளவாட்டில்  மடித்து பின்பு அகல வாட்டில் சுருட்டி வாயில் போட்டு அப்படியே  மென்றால் அப்பா !வாய் எப்படி மணக்கும் தெரியுமா !அதைத்தாங்க  தாம்பூலம் தரித்தல் என்று கூறலாம்!
                                             
   

  அந்த சாறு வயிற்றுக்குள் போகும்போது    குரல்வளத்ததைக்கொடுக்கும்! ஜீரண சக்தியை அதிகரிக்கும் !, வயிற்றில் தங்கி உள்ள வாயுதொந்திரவுகளை வெளியேற்றி   வயிற்றை பிரியாக வைக்கும் ! வயிறு பிரச்சினை  இல்லாமல் இருந்தால் கோபம் வராது !சல்லுசல்லுன்னு யார் மேலேயும் விழ மாட்டோம் !கோபம் குறைந்தால் சண்டை வராது ! சுண்ணாம்பு சத்து பற்களுக்கும் எலும்புகளுக்கும் பலத்தை கொடுக்கிறது !பாக்கு பித்தத்தை குறைக்கிறது !அது போல ஏலக்காய் கிராம்பு போன்றவைகள் ஒவ்வொன்றும்   ஒவ்வொரு மருத்துவ குணம் கொண்டவை ! உடலுக்கு நன்மைகள் தருபவை !
       இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அதை பயன் படுத்துபவரை பொறுத்து சில தீமைகளும் உண்டு !என் உறவினர் ஒருவர்  வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு இவற்றுடன் புகையிலை சேர்த்து போடுவார் !அந்த காலத்தில்  அங்கு விலாஸ் புகையிலை சிவகிரி புகையிலை என்று பல வகைகள் உண்டு ! என் உறவினர் அங்கு விலாஸ் புகையிலை உபயோகிப்பார் !சில சமயம் அதற்கு டிமாண்டும் உண்டு !அப்போது முன் கூட்டியே மொத்தமாக வாங்கி வைத்துக்கொள்வார் ! இவருடன் வெற்றிலை போடுவதற்கு என்றே ஒரு கூட்டம் உண்டு ! காலையிலேயே அவர் வீட்டுக்கு ஆறு ஏழு பேர் வருவார்கள் !
 அவர்களுக்கு காப்பி கொடுத்து பின்பு வெற்றிலை போட்டு ஊர் கதைகள் பேசி கலைந்து செல்வார்கள் ! இது வாடிக்கை! இவர் அதிகமாக புகையிலையை உபயோகித்து அதை ஒரு கை பார்த்ததால் புகையிலை இவர் பற்களை ஒரு கை பார்த்து விட்டது ! !புகையிலையில்  உள்ள சேர்மானங்கள் அவரின் 55 வயதிலேயே அவர் பற்களை ஒவ்வொன்றாக வாயிலிருந்து வெளியேற்றி விட்டன !அந்த  காலத்தில் பல் கட்டும் வசதி இல்லை !எனவே கடைசி வரை பொக்கை வாயாகவே இருந்தார் ! அவர் பேசினால் என்னேவென்றே புரியாது !புஸ் புஸ்ஸென்று காத்துதான் வரும் !அவர் மனைவிக்கு ரொம்ப சந்தோசம் ! ! தொன தொன வென்று நச்சரிக்க முடியாது அல்லவா ! ஆனால் அவர்தான் பாவம் மிகவும் சங்கடப்பட்டார் !அதை பார்த்து நாங்கள் வெற்றிலை பாக்கு பக்கம் எட்டி கூட பார்ப்பதில்லை !

                                     
 சிலர்  பீடா போடுவார்கள் ! லாகிரி  வஸ்த்துகள்  அதில் சேர்க்காமல் இருந்தால் நல்லது !
ஆனால் வெற்றிலைக்கென்று தனி மதிப்பு உண்டு !
அதனுடைய மருத்துவ குணங்கள் ஒரு புறம் இருக்க விசேச காலங்களில் வெற்றிலைக்குதான் முதல் மரியாதை !திருமண விழாக்களில்  வெற்றிலை 
பாக்குதான் முதலிடம் வகிக்கிறது !  
அதோடு விநாயகர்  ஆஞ்சநேயர் இவர்களுக்கு வெற்றிலை  மாலை சார்த்தி மகழ்வார்கள் !நன்மை  தீமை  எல்லாவற்றிலும் உண்டு ! நன்மைகளை  எடுத்துக்கொண்டு தீமைகளை விலக்கி விடுவதே நமக்கு சிறப்பு !

       
    

Saturday, 8 August 2015

ஆசையும் மீசையும்

   நான் கல்யாணம் ஆகும் வரை மீசை வைக்க வில்லை ! மீசை வளராமல்  இல்லை !அது பாட்டுக்கு உரம் போடாமலே வளர்ந்தது !மீசை வைக்கத்தான்
  பயம் ! எங்கள் குடும்பத்தில்  யாருமே மீசை வைப்பதில்லை ! மீசை வைப்பது என்னவோ பெரிய  அபசாரம் போல நினைத்தனர் ! கல்யாணம் ஆனதும்  எனது மைத்துனர்கள் இருவரும் மீசை வைத்து இருந்ததை பார்த்து  எனக்கும் மீசை மேல் ஆசை வந்தது ! அவர்கள் பெரிய மீசை எல்லாம் வைக்கவில்லை ! ஜெமினி கணேசன்   போல அழகான மீசை வைத்திருந்தார்கள் ! ஆனால் நான்  எப்படி வைப்பது !ஆசாரமான குடும்பம் ! என் தகப்பனாரை கண்டால் சிம்ம சொப்பனம்!  இந்த லட்சனத்தில்  மீசை மேல் ஆசை !மீசை இல்லாமல்  வாழ்க்கை  இல்லை என்ற நினைப்பு ! பல  நாள்  தூக்கமில்லை !சாப்பாட்டின் மேல் வெறுப்பு ! யாரை கண்டாலும்  கோபம் ! பல நாள் யோசனைக்கு பிறகு எப்படியும் மீசை வைத்து விடுவது ! என்ன வந்தாலும் எதிர் கொள்வோம் என்ற நிலை எடுத்தேன் ! இதற்காக பல நாள் ஷேவ் செய்யாமல் தாடி  வளர்த்தேன் ! தாடி என்றால் முள்ளு முள்ளாக தாடையில் இருக்கும்! அவ்வளவுதான்! குறைந்த வயசு தானே ! அந்த அளவுக்குத்தான் வளர்ந்தது ! பின்பு  தடையில் உள்ள முடியை ஷேவ் செய்து விட்டு மீசையை அப்படியே விட்டு விட்டேன் !
குற்றவாளி  அரசன் முன்பு நிற்பதை போல என் தகப்பனார் முன்பு போய் நின்றேன் ! சத்தம் போடுவாரா  எசுவாரா என்ற பயம் ஒரு புறம் !எது வந்தாலும் மீசையை விட்டு கொடுக்க கூடாது என்ற மனம் ஒரு புறம் ! என் தகப்பனார் ஏறிட்டு பார்த்து விட்டு தலையை  குனிந்து கொண்டார் !இது எனக்கு மேலும் தர்ம சங்கடத்தை உண்டாக்கியது !மீசையை  பார்த்தாரா பார்க்கவில்லையா ?
பார்த்தால் ஏன் ஒன்றும் சொல்லவில்லை ? இல்லையெனில் திரும்ப எப்படி பார்க்க வைப்பது ! இரண்டு மூன்று நாட்கள் இப்படியே கழிந்தது !சத்தமும் இல்லை யுத்தமும் இல்லை ! தைரியமாக மீசையை வைத்து விட்டேன் !
பையன் துணிந்து விட்டான் ! அவன் மைத்துனர்களும் வைத்திருக்கிறார்கள் ! எனவே மீசை வைப்பதை எதிர்த்து நம் மரியாதையை கெடுத்துக்கொள்ள  வேண்டாம் என்று என் தகப்பனார் நினைத்து இருக்கலாம் ! என் தகப்பனார் இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன !இப்போது அவரின் கண்டிப்பையும்  கனிவையும் நினைத்து வியக்கிறேன் !
     எனது உறவினர் ஒருவர் அரசு துறையில்  வேலை  பார்த்தார் ! இவரோ உயரம் கட்டை !பதவியோ பெரிது !எப்படி  சமாளிப்பது என்று யோசித்தார் !பெரிய மீசையாக வைத்துவிட்டார் ! மீசையை வளைத்து கிருதாவோடு இணைத்து விட்டார் ! முகமே  வேறு மாதிரி  ஆகி விட்டது ! மிகவும்  கோபக்காரர் போலவும்  எதற்கும்  பயப்படாதவர் போலவும் ஒரு தோற்றத்தை கொடுத்து விட்டது !எவரும் இவரிடம் நெருங்கவே  பயப்பட்டனர் ! இப்படியே  காலத்தை  ஓட்டி ஓய்வும் பெற்று விட்டார் ! ஒய்வு பெற்ற மறு நாளே  மீசையை குறைத்து விட்டார் !ஏனெனில் பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ண வேண்டும் ! சம்பந்தகாரர்கள் பயந்துபோய் ஓடி விடக்கூடாது அல்லவா!
   தன் குழந்தையை  கொஞ்சும் போது மீசை குத்தக்கூடாது என்று மீசையை எடுத்து விடுவோரும் உண்டு !குழந்தை அழுதால் அதை கொஞ்ச வேண்டாம் என்று  மீசையை பெரிதாக நினைப்போரும்  உண்டு ! எப்படியாயினும்  சேவலுக்கு கொண்டை  அழகு போல ஆண்களுக்கு  மீசை அழகுதான் !
                                                 
 
                                                     

Friday, 7 August 2015

சில திருமணங்களில் சில அனுபவங்கள் !



                                                                 படம் கூகிள்   
திருமணவிழாக்களுக்கு  செல்லும்போது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவகையான அனுபவங்கள் நமக்கு கிடைக்கின்றன !என்நண்பர் ஒருவருக்கு நடை பெற்ற திருமணம் ஒன்றிற்கு  சென்றிருந்தேன் ! அதுஒரு கிராமத்தில் நடை பெற்றது ! அங்கு மதிய சாப்பாடு போட  இரண்டு  மணி  ஆகிவிட்டதுஅவ்வளவு பேருக்கும்  நல்ல பசி ! அதோடு நல்ல வெயில்  நேரம் ! இலை போட்டு சாப்பாடு பரிமாறியவுடன் எல்லோரும் அவசர அவசர மாக சாப்பிட ஆரம்பித்தனர்!  அவ்வளவுதான் எல்லோருக்கும் விக்கல் வந்துவிட்டது !அனைவரும் தண்ணீர்  தண்ணீர் என்று தவிக்க, தண்ணீர் வந்தபாடில்லை !காரணம் டம்ளர் இல்லை !ஐந்து டம்ளரை வைத்துக்கொண்டு ஒவ்வொருத்தருக்காக ஊற்றி கொடுத்து கொண்டிருந்தனர் ! பாதி பேருக்கு விக்கலில்  கண்ணீர் வந்து விட்டது ! தண்ணீர் கொடுத்தவரிடம் சொம்பை  பிடுங்கி சிலர் குடித்து விட்டனர் ! சிலருக்கு அதுவும் கிடைக்காமல் போய் விட்டது!இது ஒரு அனுபவம் !
படம்   கூகிள்
    இன்னொரு திருமண  விழா அனுபவம் வேறு மாதிரியாக இருந்தது ! மாப்பிள்ளையின் தகப்பனாரும் தாயாரும் நேரில் வந்து அழைத்தார்கள் !கட்டாயம் வர வேண்டும் என்று வற்புறுத்தி கூப்பிட்டார்கள் !அதனால் நானும் மனைவியும்  சென்றோம்! மூன்று மணி  நேரம் பஸ் பயணம்! பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோவில் திருமண மண்டபம் சென்றோம் ! அங்கு வரவேற்க  நாதி இல்லை ! உள்ளே சென்றால்  சாப்பிட சொல்ல ஆளில்லை !
நானாக மாப்பிள்ளையின் அப்பாவை கண்டு பிடித்து வணக்கம் சொன்னேன் ! அவர் வரவேற்க  வேண்டியதிருக்க நான் அவரை வரவேற்றேன் !அவர் பதிலுக்கு வாங்க என்று கூறி விட்டு  அவர் வேலையில் பிசி ஆகி விட்டார் !  வீடு தேடி வந்து  அழைக்கிறார்கள் ! அதனால் பலர் வெகு தூரத்தில் இருந்து பஸ்ஸில்  உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டு வந்திருப்பார்கள் !இப்படி பலர்  பல கஷ்டங்களுகக்கு உள்பட்டு வந்திருப்பார்கள் ! இவர்களை  முகப்பில் நின்று முக மகிழ்வுடன் வரவேற்றால் வந்தவர்களுக்கு பயணத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் பறந்து போகும் !பலருக்கு இது தெரிவதில்லை !