Saturday, 8 August 2015

ஆசையும் மீசையும்

   நான் கல்யாணம் ஆகும் வரை மீசை வைக்க வில்லை ! மீசை வளராமல்  இல்லை !அது பாட்டுக்கு உரம் போடாமலே வளர்ந்தது !மீசை வைக்கத்தான்
  பயம் ! எங்கள் குடும்பத்தில்  யாருமே மீசை வைப்பதில்லை ! மீசை வைப்பது என்னவோ பெரிய  அபசாரம் போல நினைத்தனர் ! கல்யாணம் ஆனதும்  எனது மைத்துனர்கள் இருவரும் மீசை வைத்து இருந்ததை பார்த்து  எனக்கும் மீசை மேல் ஆசை வந்தது ! அவர்கள் பெரிய மீசை எல்லாம் வைக்கவில்லை ! ஜெமினி கணேசன்   போல அழகான மீசை வைத்திருந்தார்கள் ! ஆனால் நான்  எப்படி வைப்பது !ஆசாரமான குடும்பம் ! என் தகப்பனாரை கண்டால் சிம்ம சொப்பனம்!  இந்த லட்சனத்தில்  மீசை மேல் ஆசை !மீசை இல்லாமல்  வாழ்க்கை  இல்லை என்ற நினைப்பு ! பல  நாள்  தூக்கமில்லை !சாப்பாட்டின் மேல் வெறுப்பு ! யாரை கண்டாலும்  கோபம் ! பல நாள் யோசனைக்கு பிறகு எப்படியும் மீசை வைத்து விடுவது ! என்ன வந்தாலும் எதிர் கொள்வோம் என்ற நிலை எடுத்தேன் ! இதற்காக பல நாள் ஷேவ் செய்யாமல் தாடி  வளர்த்தேன் ! தாடி என்றால் முள்ளு முள்ளாக தாடையில் இருக்கும்! அவ்வளவுதான்! குறைந்த வயசு தானே ! அந்த அளவுக்குத்தான் வளர்ந்தது ! பின்பு  தடையில் உள்ள முடியை ஷேவ் செய்து விட்டு மீசையை அப்படியே விட்டு விட்டேன் !
குற்றவாளி  அரசன் முன்பு நிற்பதை போல என் தகப்பனார் முன்பு போய் நின்றேன் ! சத்தம் போடுவாரா  எசுவாரா என்ற பயம் ஒரு புறம் !எது வந்தாலும் மீசையை விட்டு கொடுக்க கூடாது என்ற மனம் ஒரு புறம் ! என் தகப்பனார் ஏறிட்டு பார்த்து விட்டு தலையை  குனிந்து கொண்டார் !இது எனக்கு மேலும் தர்ம சங்கடத்தை உண்டாக்கியது !மீசையை  பார்த்தாரா பார்க்கவில்லையா ?
பார்த்தால் ஏன் ஒன்றும் சொல்லவில்லை ? இல்லையெனில் திரும்ப எப்படி பார்க்க வைப்பது ! இரண்டு மூன்று நாட்கள் இப்படியே கழிந்தது !சத்தமும் இல்லை யுத்தமும் இல்லை ! தைரியமாக மீசையை வைத்து விட்டேன் !
பையன் துணிந்து விட்டான் ! அவன் மைத்துனர்களும் வைத்திருக்கிறார்கள் ! எனவே மீசை வைப்பதை எதிர்த்து நம் மரியாதையை கெடுத்துக்கொள்ள  வேண்டாம் என்று என் தகப்பனார் நினைத்து இருக்கலாம் ! என் தகப்பனார் இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன !இப்போது அவரின் கண்டிப்பையும்  கனிவையும் நினைத்து வியக்கிறேன் !
     எனது உறவினர் ஒருவர் அரசு துறையில்  வேலை  பார்த்தார் ! இவரோ உயரம் கட்டை !பதவியோ பெரிது !எப்படி  சமாளிப்பது என்று யோசித்தார் !பெரிய மீசையாக வைத்துவிட்டார் ! மீசையை வளைத்து கிருதாவோடு இணைத்து விட்டார் ! முகமே  வேறு மாதிரி  ஆகி விட்டது ! மிகவும்  கோபக்காரர் போலவும்  எதற்கும்  பயப்படாதவர் போலவும் ஒரு தோற்றத்தை கொடுத்து விட்டது !எவரும் இவரிடம் நெருங்கவே  பயப்பட்டனர் ! இப்படியே  காலத்தை  ஓட்டி ஓய்வும் பெற்று விட்டார் ! ஒய்வு பெற்ற மறு நாளே  மீசையை குறைத்து விட்டார் !ஏனெனில் பிள்ளைகளுக்கு கல்யாணம் பண்ண வேண்டும் ! சம்பந்தகாரர்கள் பயந்துபோய் ஓடி விடக்கூடாது அல்லவா!
   தன் குழந்தையை  கொஞ்சும் போது மீசை குத்தக்கூடாது என்று மீசையை எடுத்து விடுவோரும் உண்டு !குழந்தை அழுதால் அதை கொஞ்ச வேண்டாம் என்று  மீசையை பெரிதாக நினைப்போரும்  உண்டு ! எப்படியாயினும்  சேவலுக்கு கொண்டை  அழகு போல ஆண்களுக்கு  மீசை அழகுதான் !
                                                 
 
                                                     

No comments:

Post a Comment