Tuesday, 31 October 2017

நாட்டு நடப்பு!

சில திருமண வீடுகளுக்கு அழைப்பிதழ் கொடுக்க வருவார்கள். நீங்கள் கட்டாயம் வர வேண்டும். உங்களை எதிர் பார்த்திருப்பேன்.என்று கூறுவார்கள்.ஆனால் கல்யான வீட்டுக்கு போனால் வரவேற்க ஆள் இருக்காது.நம்மை நாமே வறவேற்றுக் கொள்ள வேண்டியதுதான்.நாமே மணமேடைக்குச் சென்று நாமே அறிமுகப் படுத்தி மொய் கொடுத்து விட்டு டைனிங் ஹாலில்  நாமே போய் சாப்பிட்டு விட்டு தாம்பூலத்தை நாமே கேட்டு வாங்கி வீடு வந்து சேர வேண்டும்.
சில வீடுகளில் போனால் உரியவர் இரண்டு கையை நீட்டி மாமா வாங்க! அண்ணா வாங்க! அத்தான் வாங்க! உறவு முறை இல்லை என்றால் ஐயா வாங்க என்று அன்போடு வரவேற்று மணமேடைக்கு அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தி,ஒரு ஆளை ஏற்பாடு செய்து சாப்பாட்டிற்கு அழைத்துச் செல்ல சொல்வார்கள்.அவரும் நம்மை உபசரித்து தாம்பூல கவரும் வாங்கி கொடுத்து அனுப்பி வைப்பார்.
பலரும் காலையில் எழுந்து குளித்து பஸ்ஸை பிடித்து சமயத்தில் ஸ்டாண்டிங்கிலேயே நிற்க வேண்டி வரும். பின் ஆட்டோ பிடித்து திருமண மண்டபம் போவார்கள்.
இப்படி கஷ்டப்பட்டு வருகிறவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்தால் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.பஸ்ஸில் பட்ட கஷ்டம் எல்லாம் மறந்து போகும்.
பிறரை வரவேற்று உபசரிப்பதே தமிழனின் பண்பாடு!

Sunday, 29 October 2017

மலரும் நினைவுகள்!

நான் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய நேரம்.ஒருநாள் தாசில்தார் ஒருவர் மாலையில் வந்து ஜாயிண் பண்ணினார்.உடன் கலெக்டர் மீட்டிங் இருந்ததால் அதற்கு போய் விட்டார். நாங்களும் உடன் போயிருந்தோம்.மீட்டிங் முடிய இரவு ஏழு மணி ஆகி விட்டது. மீட்டிங் முடிந்து வந்த தாசில்தார் பதற்றமாக காணப்பட்டார்.சார்! ஏன் பதற்றமாக இருக்கிறீர்கள்? என்ன விஷயம்? என்று கேட்டோம்.என் ஒய்ப் போன உடன் டிபன் வாங்கி அனுப்பச் சொன்னாள். இந்த நெருக்கடியில் மறந்து விட்டது என்றார்.இவ்வளவு தானா? சார்.வாருங்கள். நாமும் சாப்பிட்டு விட்டு அவங்களுக்கும் வாங்கிச் செல்வோம் என்றோம். ஐங்ஷனில் உள்ள செண்ட்ரல் கபேக்கு சென்று எல்லோரும் சாப்பிட்டு விட்டு அவங்க வீட்டம்மாவுக்கும் பார்சல் வாங்கி சென்றோம்.அவர் வீட்டிற்கு போனதும் நாங்கள் ரிசப்சன் ஹாலில் இருந்தோம்.தாசில்தார் உள்ளே சென்று அவர் வீட்டம்மாவிடம் பார்சலை கொடுத்து விட்டு வந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே ,அவரையும் தாண்டி அந்த பார்சல் வாசலில் போய் விழுந்தது.விழுந்த வேகத்தில் அதனுள் இருந்த டிபன் எல்லாம் சிதறி போயிற்று.
தோனி கூட அவ்வளவு வேகத்தில் பால் வீசி இருக்க முடியாது.
அந்தம்மா சொன்ன நேரத்தில் டிபன் வாங்கி அனுப்ப வில்லையாம்.அந்த கோபமாம்.
தாசில்தாருக்கு முகம் வெளிறி போயிற்று.சார்! எல்லோர் வீட்டிலும் நடப்பதுதான். கவலையை விடுங்க என்று சமாதானப் படுத்தினோம். தம்பி! நான் வெளியேதான் தாசில்தார். வீட்டில் மிகக் கேவலம் என்று ஒரு வரியில் முடித்துக் கொண்டார்.அதிலேயே அவரின் மனவலி எல்லாம் தெரிந்தது. அதற்கு மேல் என்னத்தை சொல்ல!!

Friday, 27 October 2017

இறைவன் எங்கும் உள்ளான்!

இந்த வருடம் சஷ்டி விரதம் தொடங்குய முதல் நாள்.நான் ஆறு நாளும் காலையும், மாலையும் சஷ்டி கவசம் படிப்பது என முடிவெடுத்தேன். முதல் நாள் காலை குளித்து விட்டு பூஜை அறை முன்பு கவசம் படித்தேன்.எழுத்து சிறியதாக இருந்தது. படிக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.இதை யாரிடமும் சொல்லவில்லை.பெரிய எழுத்தில் இருந்தால் சௌகரியமாக  இருக்கும் என்று மனதில் எண்ணிக் கொண்டேன்.
சிறிது நேரம் கழித்து திருநெல்வேலி டவுண்  வாகையடி முக்கில் உள்ள டாக்டரை பார்க்கச் சென்றேன். என்னோடு இன்னும் பலரும் அங்கு  இருந்தனர்.
அங்கு அன்பர் ஒருவர் வந்தார்
வந்தவர் தன் கையில். இருந்த பையை திறந்து அதில் இருந்த கந்த சஷ்டி கவசம் புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்து படித்து விட்டு ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொண்டு மெதுவாக கொடுங்கள் என்றார். நான் திறந்து பார்த்தேன். கந்த சஷ்டி கவசம் முழுவதும் பெரிய  எழுத்துக்களில் இருந்தது.கண்ணாடி இல்லாமலே படிக்கக் கூடிய அளவு பெரிய எழுத்தில் இருந்தது.
அவர் யார் என்று எனக்கு தெரியாது,! நான் யாரென்று அவருக்கு தெரியாது.நான் கேட்காமலேயே அவர் ஏன் என்னிடம் கொண்டு வந்து தர வேண்டும்.
நினைக்க நினைக்க கண்ணீர். பெருக்கெடுத்தது.முருகா!  என்னையும் ஒரு பொருட்டாக மதித்து நான் மனதில் எண்ணியதை  சில மணி நேரத்தில் ஒரு அன்பர் மூலம். கிடைக்கச் செய்தாயே! உன் கருணையை என்னவென்று உரைப்பேன்.யான் பெற்ற பேறு யார் பெறுவார் இவ்வுலகில்!
முருகா போற்றி! கந்தா போற்றி!!

Thursday, 26 October 2017

எத்தனுக்கு எத்தன்,!

ஒருவர் தனது கிணற்றை வேறொரு நபருக்கு கிறயம் செய்து கொடுத்து விட்டார். இரண்டு நாட்கள் கழித்து கிறயம் பெற்றவரிடம் சென்று
நான் உமக்கு கிணற்றை மட்டும் தான் கிறயம் செய்து கொடுத்தேன்.அதில் உள்ள தண்ணீரை கிறயம் கொடுக்க வில்லை.அதனால் அதில் உள்ள தண்ணீருக்கு தனியாக பணம் தர வேண்டும் என்றார்!
கிறயம் பெற்றவர் யோசித்தார்.
நானும் அது விஷயமாக உம்மை பார்க்க வர வேண்டும். என்று இருந்தேன். நல்ல வேளை நீரே வந்து விட்டீர்.
நீர் சொன்னபடியே கிணற்றை கிறயம் செய்து கொடுத்து விட்டீர்.ஆனால் தண்ணீரை அதிலேயே வைத்திருக்கிறீர். எனவே அதற்காக நீர் எனக்கு வாடகை தரவேண்டும் என்றார்!
இது எப்படி இருக்கு,!!
.

சமயோசிதம்

இளம் கணவன் மனைவி இருவரும்,ஜோசியரிடம் ஜாதகம் பார்க்க சென்றனர்.
பெண்ணின் ஜாதகத்தை பார்த்த ஜோசியர் இந்த பெண்ணின் ஜாதகம். மிகவும் மோசமாக இருக்கிறது பாவமும் நிறைய இருக்கிறது. எனவே இந்த பெண் கூட எங்கும் செல்லாதீர்கள். உங்களுக்கும். ஆபத்து ஏற்படும் என்றார்.
உடனே அவன் சரி ஜோசியரே என் ஜாதகத்தை பாருங்கள் என்றான்.
அதை பார்த்த ஜோசியர் இது பஸ்ட் கிளாஸ் ஜாதகம்.மிகவும் புண்ணிய ஜாதகம்.இதற்கு எந்த . ஆபத்தும் கிடையாது.வந்தாலும் தூர விலகி போகும் என்றார்.
அவன் இரண்டு ஜாதகத்த்தையும் வாங்கிக் கொண்டு அவருக்கு கொடுக்க வேண்டியதையும் கொடுத்து விட்டு சொன்னான்.
அவள்ஜாதகம் பாவ ஜாதகமாக இருப்பதால்  ஒரு இடத்திற்கும் அவள் கூட நான்  செல்ல மாட்டேன்.
என் ஜாதகம் புண்ணிய ஜாதகமாக இருப்பதால் எல்லா இடத்திற்கும்  என் கூட அவள் வருவாள் என்றான்!
எந்த இடத்திலும் நம் மூளையை நாம் பயன் படுத்த வேண்டும்!!